அரசு வக்கீல்களுக்கு வழக்கு குறித்த தகவல் தர எஸ்.ஐ., பதவிக்கு கீழுள்ளவர்களை நீதிமன்றம் அனுப்ப வேண்டாம்: மாநில குற்றவியல் தலைமை வழக்கறிஞர் கடிதம்

சென்னை: கடந்த வாரம் சென்னை உயர் நீதிமன்றத்தில் திருப்பூர் காவல் நிலைய குற்ற வழக்கு தொடர்பான வழக்கு விசாரணை நடந்தது. வழக்கு தொடர்பான ஆவணங்களை அரசு குற்றவியல் வழக்கறிஞர் சம்பந்தப்பட்ட போலீசிடம் கேட்டுள்ளார். ஆனால், வந்த போலீஸ் ஏட்டு உரிய ஆவணங்களை தரவில்லை. இதனால் அரசு தரப்பு வழக்குரைஞர்கள் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைப்பதில் சிக்கல் ஏற்பட்டு குற்றவாளிகள் தப்பிக்கும் சூழல் ஏற்படுகிறது. கொலை வழக்குக்கே தகவல்களை தர சாதாரண கான்ஸ்டபிளை அனுப்பும் கலாச்சாரம் போலீசாரிடம் அதிகரித்துள்ளது.

இதனால் பெரிய குற்றவாளிகள் எளிதாக தப்பித்து விடுகிறார்கள் என்று குற்றவியல் அரசு வழக்கறிஞர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர். ஒன்றும் தெரியாமல் வருபவர்களும் அரசு வழக்கறிஞர்களின் கோபத்திற்கு ஆளாகிறார்கள்.

இந்நிலையில்,  உயர் நீதிமன்றத்தில் நடைபெறும் குற்றவியல் வழக்குகளில் ஆஜராகும் அரசு வழக்கறிஞர்களுக்கு வழக்குக்கு தேவையான ஆவணங்கள், தகவல்களை தெரிவிக்க சரியான அதிகாரிகள் அதாவது சார் ஆய்வாளர் பதவிக்கு குறைவானவர்களை அனுப்ப வேண்டாம். இதுதொடர்பாக தவறு செய்யும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திர பாபுவுக்கு மாநில குற்றவியல் தலைமை வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா கடிதம் எழுதியுள்ளார்.

Related Stories: