×

அனைத்து வகை பேருந்துகளிலும் 5 வயது வரை குழந்தைகளுக்கு இலவசம்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை:  தமிழக போக்குவரத்து கழக பஸ்களான சென்னை மாநகர பேருந்து, எக்ஸ்பிரஸ் பஸ்கள், சாதாரண பஸ்கள் மற்றும் நெடுந்தொலைவு இயக்கப்படும் பஸ்களில் இப்போது 3லிருந்து 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு பாதி கட்டணத்தில் டிக்கெட் வசூலிக்கப்படுகிறது. இனி 5 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளும் அனைத்து வகை பேருந்துகளிலும் இலவசமாக பயணிக்கலாம் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேரவையில் மானியக்கோரிக்கையின்போது அறிவித்தார்.

 மானியக்கோரிக்கையின் போது அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வெளியிட்ட அறிவிப்பு:
* தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் முறை, பண பரிவர்த்தனையற்ற பயணச்சீட்டு முறை ரூ.70 கோடி செலவில் அறிமுகப்படுத்தப்படும்.
* அனைத்து அரசு போக்குவரத்து கழகங்களின் வலைதளம் அல்லது இ-சேவை மையம் வாயிலாக இணையதள பயணச்சீட்டு வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்படும்.
* சென்னை, திருச்சி விழுப்புரம் அரசு தானியங்கி பணிமனைகளை நவீனமயமாக்குதல் மற்றும் தரம் உயர்த்துதல் பணிகள் மேற்கொள்ளப்படும். இதற்காக ரூ.70.73 லட்சம் செலவிடப்படும்.
* அரசு தானியங்கி பணிமனைகள் இல்லாத இடங்களில் அரசுத் துறை வாகனங்களை ஆய்வு செய்வதற்காகவும், பராமரிப்பதற்காகவும், அரசு நடமாடும் பணிமனைகளை ரூ.1.36 கோடி செலவில், மதுரை, திண்டுக்கல், தர்மபுரி, காஞ்சிபுரம், வேலூர், சேலம் மற்றும் திருநெல்வேலி ஆகிய 7 இடங்களில் அமைக்கப்படும்.
* அனைத்து அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கும் ஒருங்கிணைந்த பயணிகள் குறைதீர்க்கும் உதவி மையம் உருவாக்கப்படும். இதன் மூலம் உரிய போக்குவரத்து கழகங்களால் பயணிகள் குறைகள் மற்றும் புகார்களுக்கு உடனுக்குடன் தீர்வு காணப்படும்.
* பஸ்களின் வருகை, புறப்பாடு குறித்த நிகழ்நேரத் தகவல்கள் மதுரை மற்றும் கோவை நகரங்களில் மொத்தம் 16 பஸ் முனையங்களில் இணையவழி தகவல் அமைப்பு மூலமாக காட்சிப்படுத்தப்படும்.
* தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் வருவாயை அதிகரிக்கவும், பயணச்சுமை பெட்டியில் மீதமுள்ள இடத்தை சோதனை அடிப்படையில் சென்னை, திருச்சி மற்றும் மதுரை போன்ற இடங்களுக்கு மாதாந்திர அல்லது தினசரி வாடகை அடிப்படையில் பயணம் செய்யாத நபர்களின் பார்சல் மற்றும் தூதஞ்சல் அனுப்ப பயன்படுத்தப்படும்.
* விழா நாட்கள் நீங்கலாக இதர நாட்களில், இணையவழிப் பயணச்சீட்டு முன்பதிவு வாயிலாக இருவழிப் பயணச்சீட்டுகள் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும்.
* தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழங்களால் இயக்கப்படும் அனைத்து வகை பேருந்துகளிலும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள். தற்போது, 3 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு அரை கட்டணத்தில் பயணச்சீட்டு வழங்கப்படுகிறது.
* திருச்சி, விருதுநகர் மற்றும் ராமநாதபுரத்தில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய ஓட்டுநர் பயிற்சி மையம் அமைக்கப்படும். திருச்சியில் அமைக்கப்படும் ஓட்டுநர் பயிற்சி மையத்தில், பொதுமக்களுக்கு ஓட்டுநர் பயிற்சியும், அரசுத் துறை மற்றும் போக்குவரத்துக் கழக ஓட்டுநர்களுக்கு புத்தாக்கப் பயிற்சியும் அளிக்கப்படும்.
* பொதுமக்கள் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு நேரடியாக வராமலேயே ஓட்டுநர் உரிமத்தில் வாகன வகையினை ஒப்புவிப்பு செய்தல், போக்குவரத்து அல்லாத வாகன உரிமை மாற்றத்தினை தெரிவித்தல் மற்றும் பதிவுச் சான்றில் தவணைக் கொள்முதல் விவரத்தினை மேற்குறிப்பு செய்தல் ஆகிய சேவைகளை கணினி வழியாக பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
* பள்ளி வாகனங்களுக்கு முன்புறம் மற்றும் பின்புறம் கேமராவுடன், சென்சார் கருவி பொருத்தப்படும். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

* அனைத்து அரசு போக்குவரத்து கழகங்களின் வலைதளம் அல்லது இ-சேவை மையம் வாயிலாக இணையதள பயணச்சீட்டு வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்படும்.
* பள்ளி வாகனங்களுக்கு முன்புறமும் பின்புறமும் கேமராவுடன், சென்சார் கருவி பொருத்தப்படும்.

Tags : Free for children up to 5 years on all types of buses: Government of Tamil Nadu Notice
× RELATED நாடாளுமன்ற உறுப்பினர் எப்படி செயல்பட...