நெல்லை ஆயுதப்படை மைதானத்தில் வருடாந்திர கவாத்து பயிற்சி: மாநகர கமிஷனர் சந்தோஷ்குமார் ஆய்வு

நெல்லை: நெல்லை ஆயுதப்படை மைதானத்தில் இன்று நடந்த போலீசாரின் வருடாந்திர கவாத்து பயிற்சியையும் மாநகர போலீஸ் வாகனங்களையும் கமிஷனர் சந்தோஷ்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ்குமார் உத்தரவுப்படி துணை கமிஷனர் சுரேஷ்குமார்(கிழக்கு) மேற்பார்வையில், ஆயுதப்படை உதவி கமிஷனர் முத்தரசு தலைமையில் பாளையில் உள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் ஆயுதப்படை போலீசாரின்  வருடாந்திர கவாத்து பயிற்சி மற்றும் மாநகர போலீஸ் வாகனங்கள் ஆய்வு இன்று  நடந்தது.  ஆயுதப்படை போலீசாரின் வருடாந்திர கூட்டு கவாத்து பயிற்சியின் ஒரு பகுதியாக நினைவூட்டும் கவாத்து பயிற்சி கடந்த ஏப்ரல் 18ம் தேதி தொடங்கியது. 15 நாட்கள் நடைபெறும் இப்பயிற்சியின் நிறைவு நாள் பயிற்சி இன்று நடந்தது. ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் டேனியல் கிருபாகரன் பயிற்சியின் போது நடைபெற்ற போலீசாரின் அணிவகுப்பை வழிநடத்திச் சென்றார். இதேபோல் மாநகர மோட்டார் வாகன பிரிவு இன்ஸ்பெக்டர் ராணி வழிகாட்டுதல்படி மாநகர போலீஸ் வாகனங்கள் ஆய்வு நடந்தது.

இதில் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர்  சந்தோஷ்குமார் கலந்து கொண்டு பயிற்சி முடித்த போலீசாரின் கையேடு, உடைகள், லத்தி உள்ளிட்ட பாதுகாப்பு பொருட்கள் மற்றும் அவர்களின் உடைமைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து அவர் மாநகர போலீஸ் வாகனங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். கவாத்து பயிற்சி மற்றும் வாகன ஆய்வுகளில் ஆயுதப் படையைச் சேர்ந்த எஸ்ஐக்கள், ஏட்டுகள் மற்றும் ஒரு ஆயுதப்படை பிரிவுக்கு 60 பேர் வீதம் 6 படைப் பிரிவுகளைச் சேர்ந்த 360 பேர் மற்றும் மோட்டார் வாகன படைப் பிரிவைச் சேர்ந்த 60 பேர் என மொத்தம் 420 போலீசார் கலந்து கொண்டனர். வருடாந்திர கூட்டு கவாத்து பயிற்சியின் நிறைவு நாளான இன்று மாலை நடைபெறும் பெரு விருந்தில் இப்பயிற்சியில் கலந்து கொண்ட போலீசார், போலீஸ் உயர் அதிகாரிகள் மாவட்ட மற்றும் மாநகர நிர்வாகத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொள்வதாக ஆயுதப்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: