5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு அரசு பேருந்துகளில் இனி கட்டணம் கிடையாது; பள்ளி, வாகனங்களுக்கு முன், பின் புறங்களில் கேமரா: அமைச்சர் அறிவிப்பு

சென்னை: 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு அரசு பேருந்துகளில் இனி கட்டணம் வசூலிக்கப்படாது என பேரவையில் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அறிவித்தார். போக்குவரத்து துறை மானிய கோரிக்கை மீது அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பதிலுரை ஆற்றி வருகிறார். தற்போது 3 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு அரைக் கட்டணத்தில் பயணசீட்டு வழங்கப்படுகிறது. தமிழக சட்டப்பேரவையில் போக்குவரத்துறை மீதான மானியக் கோரிக்கைகள் மீது விவாதத்திற்கு பதிலளித்துப் பேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அனைத்து வகை  அரசுப்பேருந்துகளிலும் 5-வயது வரையிலான குழந்தைகளுக்கு கட்டணம் கிடையாது. பள்ளி, வாகனங்களுக்கு முன், பின் புறங்களில் கேமராவுடன் சென்சார் கருவி பொருத்த ஏதுவாக சிறப்பு மோட்டார் வாகன விதிகள் உருவாக்கப்படும்.

தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் முறை, பண பரிவர்த்தனையற்ற பயணச்சீட்டு முறை அறிமுகப்படுத்தப்படும். விழா நாட்களைத் தவிர இதர நாட்களில் இணைய வழி வாயிலாக இருவழி பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு 10 சதவீத தள்ளுபடி வழங்கப்படும். தமிழகத்தில் சில குறிப்பிட்ட பேருந்துகளில் மட்டும் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் 106.34 கோடி முறை பெண்கள் இலவச பேருந்து பயணம் செய்துள்ளனர் என போக்குவரத்து துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு பேருந்துகளில் கேமரா பொருத்தி மத்திய கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கும் பணி விரிவுபடுத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Related Stories: