×

தன்னை திருமணம் செய்ய கோரி முன்னாள் காதலி வீட்டின் முன்பு தகராறு விசாரணை நடத்திய எஸ்ஐ மீது வாலிபர் தாக்குதல்: கே.கே.நகரில் பரபரப்பு

சென்னை: தன்னை திருமணம் செய்ய கோரி முன்னாள் காதலி வீட்டின் முன்பு தகராறில் ஈடுபட்டதை விசாரித்த எஸ்ஐ மீது தாக்குதல் நடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர். சென்னை கே.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெயந்த்(26). இவர் அதே பகுதியில் உள்ள பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். பிறகு இவரது நடவடிக்கை சரியில்லாததால் அந்த பெண் ஜெயந்தை விட்டு விலகியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு 7 மணி அளவில் ஜெயந்த் தனது முன்னாள் காதலியின் வீட்டின் முன்பு சென்று, ‘தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும்’ என்று கூறி தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதை சற்றும் எதிர்பார்க்காத இளம் பெண் மற்றும் அவரது தந்தை அதிர்ச்சியடைந்தனர். உடனே பல முறை எடுத்து கூறியும் அவர் பிடிவாதமாக தகராறில் ஈடுபட்டதால், அருகில் இருந்தவர்கள் உதவியுடன் ஜெயந்தை கே.கே.நகர் காவல்நிலையத்தில் இளம் பெண்ணின் தந்தை ஒப்படைத்தார். பிறகு இளம் பெண்ணின் தந்தை அளித்த புகாரின் படி கே.ேக.நகர் காவல் நிலையம் உதவி ஆய்வாளர் செந்தில் விசாரணை நடத்தினார்.

அப்போது ஜெயந்த் விசாரணை நடத்திய உதவி ஆய்வாளர் செந்திலை மரியாதை குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. உடனே உதவி ஆய்வாளர் ஜெயந்தை காவல் நிலையத்திற்குள் அழைத்து செல்ல முயன்றார். இதனால், உதவி ஆய்வாளர் செந்திலுக்கும், ஜெயந்த்துக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த ஜெயந்த், உதவி ஆய்வாளர் செந்திலை கடுமையாக தாக்கினார். இதில் உதவி ஆய்வாளருக்கு முகத்தில் காயம் ஏற்பட்டது.
உடனே காவல் நிலையத்தில் இருந்த போலீசார் தாக்குதல் நடத்திய ஜெயந்தை பிடித்து விசாரணை நடத்தினர்.

அதில், ஜெயந்த் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும், நேற்று மாலை சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திரும்பிய நிலையில் தனது முன்னாள் காதலி வீட்டிற்கு வந்து தகராறில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. பின்னர் உதவி ஆய்வாளர் மீது தாக்குதல் நடத்திய வாலிபர் ஜெய்ந்தை கைது செய்து அவரது மனநலம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் கே.கே.நகர் காவல் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : KK Nagar , Marriage, ex-girlfriend, house, dispute
× RELATED மின் கசிவு காரணமாக பெட், சோபா...