×

திருப்பதிசாரம் திருவாழ்மார்பன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்: 12ம் தேதி தேரோட்டம்

நாகர்கோவில்:  திருப்பதிசாரம் திருவாழ்மார்பன்கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம் நேற்று காலை நடைபெற்றது. 108  திவ்ய  தேசங்களில் ஒன்றான திருப்பதிசாரம் திருவாழ்மார்பன் கோயிலில் ஆண்டு  தோறும் நடக்கும் சித்திரை திருவிழா மற்றும் தேரோட்டம் பிரசித்தி பெற்றது.  நம்மாழ்வார் தாயார் உடைய நங்கையின் சொந்த ஊர் திருப்பதிசாரம். இதனால், நம்மாழ்வார் அவதரித்த பூமியாக கருதப்படும் இங்கு பெருமாள் நரசிம்ம அவதாரம் முடிந்து,  இங்குள்ள சோமதீர்த்த லெட்சுமி குளத்தில் குளித்து கோபம் தணிந்து, லெட்சுமி  தேவியை மார்பில் சூடிக் கொண்ட இடம் என்பதால், திருவாழ் மார்பன் என பெயர்  பெற்றது. சேர மன்னர் குலசேகர ஆழ்வார் இங்கு கொடி மரம் மற்றும் மண்டபங்கள்  நிறுவியுள்ளார். திருமலைநாயக்கர் ரதவீதிகளை உருவாக்கியுள்ளார். திருவாழ்மார்பன்  ராமராக விபீஷணருக்கு காட்சி தந்த  தலம் என்பதால், இங்கு ராமர் சன்னிதியின்  முன்புறம் ஆஞ்சநேயருக்கு பதில்  கருடாழ்வார் உள்ளார்.

இதுபோல், கருவறையில் சுவாமி வலது காலை மடக்கி இடது காலை தொங்க விட்ட நிலையில் அருள்பாலிக்கிறார். இங்கு சுவாமி சிலையை சுற்றி 5 ஆண்கள் மற்றும் ஒரு பெண் உருவம் கொண்ட சிலைகள் வணங்கி பணிவிடை செய்வது போன்ற சிற்பம் உள்ளது. இது பஞ்ச பாண்டவர்களை குறிக்கலாம் என்ற கருத்து உள்ளது. திருப்பதி வெங்கடாசலபதிக்கு செய்யவேண்டிய நேர்ச்சையை இங்கு செலுத்தலாம். இதுபோன்ற சிறப்புகள் வாய்ந்த இக்கோயிலில் இந்தாண்டு சித்திரை திருவிழா நேற்று காலை 6  மணிக்கு திருக்கொடி யேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 12ம் தேதி காலை 8  மணிக்கு தேரோட்டமும், 13ம் தேதி வெள்ளிக் கிழமை   காலை 6 மணி முதல் 7 மணி வரை திரு ஆராட்டும் நடைபெறுகிறது.அத்தான் மைத்துனர் சந்திப்பு சுசீந்திரம்  தாணுமாலயன் சுவாமி கோயிலில் மக்கள்மார் சந்திப்பு பிரசித்தி பெற்றதுபோல்,  இங்கு அத்தான் மைத்துனர் சந்திப்பு பிரசித்தி பெற்றது ஆகும். சிவனும்,  பெருமாளும் சந்திக்கும் இந்த நிகழ்வு 5ம் திருநாளன்று நடைபெறுகிறது.


Tags : Thirupathisaram ,Thiruvaymarban ,Temple ,Siritra Festival , Tirupatisaram Thiruvazhmarpan Temple Chithirai Festival flag hoisting: Election on the 12th
× RELATED மே 30-ல் பழனி கோயில் ரோப் கார் சேவை நிறுத்தம்