விளாமுண்டி வனப்பகுதியில் புள்ளி மானை வேட்டையாடிய 3 பேர் கைது: 35 கிலோ இறைச்சி பறிமுதல்

சத்தியமங்கலம்:  சத்தியமங்கலம் அருகே விற்பனைக்காக புள்ளி மான்வேட்டையாடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 35 கிலோ மான் இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான மான்கள் வசிக்கின்றன. குறிப்பாக, புள்ளி மான்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்நிலையில், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட விளாமுண்டி வனப்பகுதியில் மான் வேட்டையாடப்படுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. வனச்சரக அலுவலர் சரவணன் தலைமையில் வனத்துறையினர் 108 குமரன் கோவில் வனப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது வனப்பகுதியில் கத்தி மற்றும் சாக்குப் பைகளுடன் சுற்றிய மூன்று பேரை பிடித்தனர். அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் 35 கிலோ மான் இறைச்சி இருந்தது.  

விசாரணையில் அவர்கள், பவானிசாகர் அருகே உள்ள அண்ணாநகரை சேர்ந்த பழனிச்சாமி (45), வெள்ளாளபாளையம் நல்லதம்பி (39), கிருஷ்ணமூர்த்தி (44) என்பது தெரியவந்தது. இவர்கள் 3 பேரும் சேர்ந்து வேட்டை நாயை பயன்படுத்தி வனப்பகுதியில் உள்ள பெண் புள்ளி மானை வேட்டையாடி இறைச்சியை விற்க முயன்றது தெரியவந்தது. இதையடுத்து  மூன்று பேரையும் வனத்துறையினர் வனச்சட்டத்தின்படி வழக்குப்பதிந்து சத்தியமங்கலம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து 35 கிலோ மான் இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: