கடம்பூர் மலைப்பகுதியில் பட்டப்பகலில் வாகனத்தை வழிமறித்த காட்டு யானை: மலை கிராம மக்கள் அச்சம்

சத்தியமங்கலம்:  கடம்பூர் அருகே பட்டப்பகலில் ஜீப்பை வழிமறித்த காட்டு யானையால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர். சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில்  ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. வனப்பகுதியில் அமைந்துள்ள சாலைகளில்  பகல் நேரங்களில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்நிலையில்,  சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதி குன்றி மலை கிராமத்தை  சேர்ந்த மலைகிராம மக்கள் நேற்று மதியம் ஒரு ஜீப்பில் கடம்பூருக்கு சென்று  விட்டு மீண்டும் குன்றி செல்வதற்காக வனப்பகுதி சாலையில் சென்றனர்.

அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஆண் காட்டு யானை,  சாலையின் நடுவே ஹாயாக நடந்து வந்தது. காட்டு யானை நடமாட்டத்தை கண்ட ஜீப்  ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தினார். மெதுவாக நடந்து வந்த காட்டு யானை  ஜீப்பின் அருகே வந்ததால் வாகனத்தில் இருந்த மலை கிராம மக்கள் அலறினர்.  மெதுவாக நடந்து வந்த காட்டு யானை சாலையோர வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது.  இதைத் தொடர்ந்து வாகனங்கள் புறப்பட்டுச் சென்றன. வனச் சாலைகளில் பகல்  நேரங்களில் காட்டு யானைகள் நடமாடுவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த  எச்சரிக்கையுடன் பயணிக்குமாறு வனத்துறையினர் மலை கிராம மக்களுக்கு  அறிவுறுத்தியுள்ளனர்.

Related Stories: