திருவண்ணாமலையில் பொதுமக்கள் அதிர்ச்சி ஓட்டலில் வாடிக்கையாளர்களுக்கு வைத்திருந்த பிரியாணியை எலி சாப்பிடும் வீடியோ வைரல்

* உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சோதனை

* விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கி அதிரடி

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் ஓட்டலில் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்காக வைத்திருந்த பிரியாணியை எலி சாப்பிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தொடர்ந்து, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஓட்டலில் சோதனை நடத்தி நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.திருவண்ணாமலை மாவட்டம், வேங்கிக்கால் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில், வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த பிரியாணியை, பாத்திரத்தின் மீது அமர்ந்தபடி சாவகாசமாக எலி சாப்பிடும் வீடியோ, வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவி வைரலானது.எலியின் எச்சம் பட்ட அல்லது அதன் முடி உதிர்ந்த உணவை சாப்பிட்டால், வயிற்றுப் போக்கு, வாந்தி உள்ளிட்ட உடல் நல பாதிப்புகள் ஏற்படுவதுடன், மிகப்பெரிய ஆபத்தையும் ஏற்படுத்தும் நிலை உள்ளது. ஆனாலும், உணவு பாத்திரத்தின் மீது அமர்ந்தபடி பிரியாணியை சாப்பிடும் எலியை கவனிக்காமல் ஓட்டல் ஊழியர்கள் அலட்சியமாக இருந்துள்ளனர்.

ஆரணி அருகே குளிர்பானம் குடித்த 18 பேர் வாந்தி மயக்கம் ஏற்பட்ட சம்பவத்தின் பரபரப்பு அடங்கும் முன்பு, பிரியாணியை எலி சாப்பிடும் வீடியோ வெளியானது பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இந்நிலையில், எலி பிரியாணி சாப்பிட்ட ஓட்டலில் நேற்று திருவண்ணாமலை நகர உணவு பாதுகாப்பு அலுவலர் எழில் சிக்கையாராஜா, ஊரக பகுதி உணவு பாதுகாப்பு அலுவலர் சிவபாலன் ஆகியோர் திடீர் சோதனை நடத்தினர். சமையலறை, இறைச்சி உள்ளிட்ட பொருட்களை வைக்கும் குளிர்சாதன பெட்டி, உணவு வழங்குமிடம் போன்றவற்றை ஆய்வு செய்தனர். அப்போது, பாத்திரங்கள் கழுவும் இடத்தில் கழிவுநீர் வெளியேறும் பைப்லைன்களில் மூடிகள் பொருத்தாமல் திறந்து கிடந்தது.

இதனால், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக, அந்த பகுதிகளை சீரமைக்க உத்தரவிட்டனர். அதைத்தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பிரியாணி ஓட்டலில் கண்டறியப்பட்ட குறைபாடுகளை பட்டியலிட்டு, அவற்றை 15 நாட்களுக்குள் சீரமைக்க வேண்டும் என நோட்டீஸ் அளித்தனர். இதுகுறித்து, உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் கூறுகையில், ‘ஓட்டலை தூய்மையாக பராமரிக்கவும், எலிகள் நுழையாதபடி கட்டமைப்பு வசதி ஏற்படுத்தவும் தெரிவித்திருக்கிறோம். ஊழியர்களின் அலட்சியமே இதுபோன்ற குறைபாடுகளுக்கு காரணம், எனவே, விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. மீண்டும் குறைபாடுகள் கண்டறியப்பட்டால், அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.

Related Stories: