அக்டோபர் 2ம் தேதி முதல் பீகாரில் 3 ஆயிரம் கி.மீ தூரம் பாதயாத்திரை; அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் அறிவிப்பு

புதுடெல்லி: அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், பீகாரை உயர்த்துவதற்காக அக்டோபர் 2ம் தேதி முதல் ‘பத்யாத்திரை’ நடத்த போவதாக இன்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டெல்லியில் இன்று அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: பீகாரில் ‘ஜன் சூரஜ்’ (மக்கள் நல்லாட்சி) தேர்தல் பிரசாரத்தை அக்டோபர் 2ம் தேதி மேற்கு சம்பாரண் காந்தி ஆசிரமத்தில் இருந்து 3000 கிமீ பாதயாத்திரையை தொடங்குகிறேன். மக்களை அவர்களின் அலுவலகங்களில் அணுகுவோம், அவர்களின் பிரச்னைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை புரிந்து கொள்ள நேரில் சந்திப்போம். ஆனால் கட்சி தொடங்க போவதில்லை.

பீகாரில் பிரச்னைகளை அறிந்த சுமார் 17,000 முதல் 18,000 பேரிடம் பேச போகிறேன். அவர்களை ஒரே மேடையில் கொண்டு வர முயற்கிறேன். ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்துக்குள் இதை முடிக்க முடியும். விரும்பிய இலக்குகளை அடைய ஒரு அரசியல் தளம் தொடங்கப்பட வேண்டும் என்று அவர்கள் நினைத்தால், அப்போது நாங்கள் முடிவு செய்வோம். இருப்பினும், அது பிரசாந்த் கிஷோரின் கட்சியாக இருக்காது, அது மக்கள் கட்சியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார். கடந்த 2ம் தேதி பிரசாந்த் கிஷோர், பீகார் அரசியலில் ஒரு மர்மமான ட்வீட் மூலம் அலைகளை ஏற்படுத்தினார்.

அவர் மக்களின் பிரச்சினைகளையும் “ஜன் சுராஜ்” (மக்களின் நல்லாட்சி) பாதையையும் நன்றாக புரிந்துகொள்ள மக்களிடம் செல்ல வேண்டிய நேரம் இது என்று கூறியிருந்தார். மேலும், ‘ஜனநாயகத்தில் அர்த்தமுள்ள பங்கேற்பாளராக இருப்பதற்கும், மக்கள் சார்பு கொள்கையை வடிவமைக்க உதவுவதற்கும் எனது தேடலானது 10 வருட ரோலர் கோஸ்டர் சவாரிக்கு வழிவகுத்தது. பிரச்னைகளை நன்கு புரிந்துகொள்வதற்கு மக்களிடம் செல்ல வேண்டிய நேரம் இது. ஜன் சுராஜ்-மக்கள் நல்லாட்சிக்கான பாதை பீகாரில் இருந்து தொடங்குகிறது’ என்று பிரசாந்த் கிஷோர் ட்வீட் செய்துள்ளார்.

Related Stories: