124-வது மலர் கண்காட்சிக்காக புது பொலிவு பெறும் ஊட்டி தாவரவியல் பூங்கா

ஊட்டி: கோடை  சீசன் சமயத்தில் வருபவர்களை மகிழ்விக்க ஊட்டியில் உள்ள நூற்றாண்டு  புகழ்பெற்ற அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு  வருகிறது. இங்கு நூற்றாண்டுகளை கடந்து மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருவது  குறிப்பிடத்தக்கது. இதனை லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு  மகிழ்வார்கள். இந்த சூழலில் 2020 மற்றும் 2021ம் ஆண்டுகளில் கொரோனா  பெருந்தொற்றின் முதல் மற்றும் இரண்டாவது அலை காரணமாக இரு ஆண்டுகளாக மலர்  கண்காட்சி உள்ளிட்ட கோடை விழாக்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. இந்த முறை  கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ள நிலையில் கோடை விழாவிற்கான  தேதிகள் அறிவிக்கப்பட்டு ஏற்பாடுகள் துரிதமாக நடந்து வருகிறது.

அதன்படி,  ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 124வது மலர் கண்காட்சி வரும் 20ம் தேதி  துவங்கி 24ம் தேதி வரை நடக்கிறது. இதனை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று  துவக்கி வைக்க உள்ளார். இதனிடையே மலர் கண்காட்சிக்காக கடந்த ஜனவரி  மாதமே மலர் செடிகள் நடவு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பூங்கா முழுவதும் 275  வகைகளில் 5.5 லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டன. இதுதவிர மலர்  மாடங்கள், கண்ணாடி மாளிகையில் காட்சிப்படுத்துவதற்காக 35 ஆயிரம்  தொட்டிகளில் பல்வேறு வண்ண மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டன. ஊட்டியில்  கடந்த மாதம் அவ்வப்போது பெய்த மழை காரணமாக மலர் செடிகள் நன்கு வளர்ந்து  மேரிகோல்டு, டேலியா உள்ளிட்ட அனைத்து வகை மலர்கள் பூத்து குலுங்குகின்றன.  இதனிடையே கண்காட்சியை சிறப்பாக நடத்தும் வகையில் பூங்கா  பொலிவுபடுத்தப்பட்டு வருகிறது. பூங்காவில் உள்ள பழமையான கட்டிடங்கள் வர்ணம்  தீட்டப்பட்டு பொலிவுபடுத்தப்பட்டு வருகிறது.

Related Stories: