×

ஆர்சிபியிடம் வீழ்ந்து பிளே ஆப் வாய்ப்பை இழந்தது.! மோசமான பேட்டிங்கால் தோல்வி; சிஎஸ்கே கேப்டன் தோனி புலம்பல்

புனே: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் புனேவில் நேற்று நடந்த 49வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ்-ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 173 ரன் எடுத்தது. அதிகபட்சமாக மகிபல் லோம்ரோர் 27 பந்தில் 42, கேப்டன் டூபிளசிஸ் 38 (22பந்து),  விராட் கோஹ்லி 30 (33பந்து), ரஜத் படிதார் 21 ரன் அடித்தனர். தினேஷ் கார்த்திக் நாட்அவுட்டாக 17 பந்தில் 26 ரன் எடுத்தார். சென்னை பவுலிங்கில், மகேஷ் தீக்ஷனா 3, மொயின் அலி 2 விக்கெட் வீழ்த்தினர். பின்னர் களம் இறங்கிய சென்னை அணியில் தொடக்க வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட் 28, புதுமாப்பிள்ளை டேவோன் கான்வே 37 பந்தில் 6 பவுண்டரி, 2 சிக்சருடன் 56 ரன் அடித்தனர்.

உத்தப்பா 1, ராயுடு 10,  ஜடேஜா 3, டோனி 2 ரன்னில் வெளியேற மொயின்அலி 34 ரன் எடுத்தார். 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்களே சென்னையால் எடுக்க முடிந்தது. இதனால் 13 ரன் வித்தியாசத்தில் பெங்களூரு வெற்றிபெற்றது. இந்த சீசனில் ஏற்கனவே மோதிய போட்டியில் சென்னை வென்றிருந்த நிலையில் நேற்று பெங்களூரு பழிதீர்த்தது. பெங்களூரு பந்துவீச்சில் 3 விக்கெட் எடுத்த ஹர்சல் பட்டேல் ஆட்டநாயகன் விருது பெற்றார். 11வது போட்டியில் 6வது வெற்றியை பெற்ற பெங்களூரு பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறியது. 7வது தோல்வியை சந்தித்த சென்னை கிட்டத்தட்ட பிளே ஆப் வாய்ப்பை இழந்தது. தோல்விக்கு பின் சிஎஸ்கே கேப்டன் டோனி கூறியதாவது:  ‘‘பந்துவீச்சு திருப்திகரமாக இருந்தது.

170 ரன் வரை மட்டுமே விட்டுக்கொடுத்தார்கள். 2வது பேட்டிங் செய்யும்போது, மைதானம் அதிகளவில் ஒத்துழைப்பு தரும் என்றுதான் எண்ணியிருந்தேன். ஓபனர்கள் சிறப்பாக செயல்பட்டனர். இருப்பினும், மிடில் வரிசையில் பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து சொதப்பி, அடுத்தடுத்து விக்கெட்களை விட்டுக்கொடுத்ததுதான் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கிறேன். ஆட்டத்திற்கு தகுந்த ஷாட்களை நாம்தான் மாற்றிக்கொள்ள வேண்டும்.  ரன்கள் எவ்வளவு தேவை என்பதை தெரிந்துகொண்டு, அதற்கேற்றாற்போல் ஷாட்களை ஆடியிருக்க வேண்டும். அப்படி செய்யவில்லை. தவறுகள் குறித்து பேசி, இனி வரும் போட்டிகளில் சிறப்பாக செயல்படுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது’’ எனத் தெரிவித்தார்.

Tags : RCB ,CSK ,Dhoni , Fell to RCB and missed the play-off opportunity.! Bad batting failure; CSK Captain Tony laments
× RELATED சிஎஸ்கே – ஆர்சிபி கிரிக்கெட்...