என்எல்சி பணி நியமனப்பட்டியலில் 300 பேரில் ஒருவர் மட்டுமே தமிழர் : நிலக்கரித்துறை அமைச்சருக்கு மதுரை எம்.பி கண்டனம்

மதுரை : என்எல்சி பணி நியமனப் பட்டியலில் உள்ள 300 பேரில், தமிழகத்தை சேர்ந்த ஒருவர் மட்டுமே தேர்வு  செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய அமைச்ருக்கு, மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார். ஒன்றிய நிலக்கரித்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு, மதுரை எம்.பி சு.வெங்கடேசன் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: நெய்வேலி அனல் மின் கழகத்தில் 300 பட்டதாரி நிர்வாக பயிற்சி பொறியாளர் நியமனங்களில் முன்னறிவிப்பின்றி கேட் மதிப்பெண்களை தேர்வுத் தகுதியாக மாற்றியதை கண்டித்தும், அதனால் இந்த தேர்வு முறையை ரத்து செய்ய கோரியும் ஏற்கனவே என்எல்சி தலைவர் ராகேஷ் சர்மாவிற்கு கடிதம் எழுதி இருந்தேன்.

இதனையொத்த நிறுவனங்களில் தேர்வுத்தகுதி குறித்து முன்னறிவிப்பு தந்து தேர்வர்களுக்கு வாய்ப்பு தரப்படுகிறது. 2018ல் இதே என்எல்சியில் கூட கேட் மதிப்பெண் தகுதி ஆக்கப்பட்டபோது, அறிக்கை உரிய அவகாசத்தோடு செப். 2017லேயே வெளியிடப்பட்டது. இம்முறை இங்கேயும் உரிய முன்னறிவிப்பு தந்திருந்தால் விருப்பமுள்ள தேர்வர்கள் கேட் தேர்வை எழுதி இருப்பார்கள்.

இப்படி முன்னறிவிப்பின்றி தேர்வு தகுதியை மாற்றியது அநீதி, சம வாய்ப்பை மறுப்பது எனச் சுட்டிக் காட்டி இருந்தேன். மேலும் இப்பதவிக்கான நியமனங்களில் தமிழகத்தை சேர்ந்த தேர்வர்கள் இறுதி தேர்வுப் பட்டியலில் இடம் பெறுவது அரிதாகி வருகிறது எனக் கவலையையும் தெரிவித்து, ஒரு குறிப்பிட்ட சதவீதம் தமிழ்நாட்டை சேர்ந்த தேர்வர்களுக்கு வழங்கப்பட கோரி இருந்தேன். தற்போது 300 பேர் கொண்ட நியமன பட்டியல் வெளியிடப்பட்டு விட்டது. அப்பட்டியலில் தமிழ்நாட்டை சேர்ந்தவர் ஒரே ஒருவர்தான் இடம் பெற்றுள்ளார்.

எனவே, இந்த தேர்வு முறையை நிறுத்தி, உரிய அவகாசத்துடன் தேர்வுத்தகுதிகளை அறிவித்து புதிய நியமனங்களை மேற்கொள்ள உத்தரவிட வேண்டுகிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related Stories: