×

ஸ்ரீ ராமானுஜர் தேர் திருவிழா

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஆதிகேசவப்பெருமாள் மற்றும் ஸ்ரீ ராமானுஜர் கோயில் உள்ளது. அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள இக்கோயிலில் சித்திரை மாத பிரம்மோற்சவம் கடந்த 16ம் தேதி கொடியேற்றம் மற்றும் கணபதி பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து, முதல் 10 நாட்கள் பிரம்மோற்சவ விழாவில் ஸ்ரீ ஆதிகேசவபெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிம்மம், சேஷம், ஹம்சவாகனம், தங்க பல்லக்கு, யாழி, யானை உள்பட பல்வேறு வாகனங்களில் மலர் அலங்காரத்தில் திருவீதி உலாவில் வந்தனர்.

இதையொட்டி, பிரம்மோற்சவத்தின் 7ம் நாளான கடந்த 22ம் தேதி காலை தேர்த்திருவிழா நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுந்து சென்றனர். இதை தொடர்ந்து, ஸ்ரீராமானுஜரின் 1005வது ஆண்டு அவதார திருவிழா கடந்த 26ம் தேதி தொடங்கி இன்று வரை தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுகிறது. இந்த விழாவில், ஸ்ரீராமானுஜர் பல்வேறு வாகனங்களில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இந்நிலையில்,ராமானுஜர் தேர்த் திருவிழா நேற்று நடந்தது. இதில், பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். கோயிலுக்கு வந்த பக்தர்களுக்கு வழிநெடுகிலும்  மோர், ரஸ்னா, இளநீர், அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும், அசம்பாவிதங்களை தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடபட்டது. பேரூராட்சி தலைவர் சாந்தி சதிஷ்குமார், துணை தலைவர் இந்திராணி சுப்பிரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Sri Ramanujar Chariot Festival , Sri Ramanujar, Chariot Festival
× RELATED ஸ்ரீபெரும்புதூரில் ராமானுஜர் தேர் திருவிழா