×

ரூ.84 லட்சத்தில் வளர்ச்சி பணிகள்; பள்ளிப்பட்டு ஒன்றிய கூட்டத்தில் தீர்மானம்

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டில் 8 மாதங்களுக்கு பிறகு நேற்று நடைபெற்ற ஒன்றிய குழு கூட்டத்தில் வளர்ச்சி பணிகளுக்கு ரூ.84 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பள்ளிப்பட்டு ஒன்றிய குழு தலைவராக பொன்.ஜான்சிராணி விஸ்வநாதன் (அதிமுக) செயல்பட்டு வருகிறார். அவர் மீது கடந்த 8 மாதங்களுக்கு முன்பு உறுப்பினர்கள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. இதனால், 8 மாதங்களாக கூட்டம் நடைபெறாமல் வளர்ச்சி பணிகள் முடங்கியநிலையில் உறுப்பினர்கள் மற்றும் ஒன்றிய குழு தலைவர் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று முடிவு செய்து கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

அதன்படி, ஒன்றிய குழு தலைவர் ஜான்சிராணி விஸ்வநாதன் தலைமையில் ஒன்றிய குழு சாதாரண கூட்டம் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர் பசுபதி வரவேற்றார். கூட்டத்தில் வரவு, செலவு, வளர்ச்சி திட்டங்கள் குறித்த திட்ட அறிக்கை வாசிக்கப்பட்டு, திட்ட பணிகள் குறித்து விவாதம் நடைபெற்றது. இதில், 33 ஊராட்சிகளில் குடிநீர், சாலை, மின் விளக்கு, கழிவுநீர் கால்வாய், வெள்ள தடுப்பணை அமைக்க பொது நிதியிலிருந்து ரூ. 84 லட்சம் ஒதுக்கீடு செய்து திர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், கொசஸ்தலை ஆற்றின் கரைப்பகுதியில் அமைந்துள்ள சொரக்காய்பேட்டையில் ஆற்றிலிருந்து வெள்ளப்பெருக்கு கிராமத்தை மூழ்கடிப்பதால், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் அவதிப்படுவதை தடுக்க ஆற்றின் கரைப்பகுதியில் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என்ற ஒன்றிய கவுன்சிலர் பொன்.சு.பாரதி கோரிக்கை ஏற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஒன்றிய குழு உறுப்பினர்கள் நதியா நாகராஜ், முத்து ரெட்டி, உஷா ஸ்டாலின் உட்பட உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags : Pallipattu Union Meeting , Pallipattu,Development tasks,Resolution at the Union Meeting
× RELATED சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள...