×

குண்டுமேடு கிராமத்தில் இடிந்துவிழும் நிலையில் மின்கம்பங்கள்

ஸ்ரீபெரும்புதூர்: குன்றத்தூர் ஒன்றியம் சாலமங்கலம் ஊராட்சி, சிறுமாத்தூர் கிராமம் குண்டுமேடு பகுதியில் இடிந்து விழும் நிலையில் உள்ள மின் கம்பங்களை அகற்றி, புதிய மின் கம்பங்கள் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் சாலமங்கலம் ஊராட்சி சிறுமாத்தூர் கிராமம் குண்டுமேட்டில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களுக்கு மின் தேவைக்காக கடந்த 20 ஆண்டுக்கு முன்பு கம்பங்கள் அமைத்து, அதில் இருந்து வயர்கள் மூலம் வீடுகளுக்கு மின் வினியோகம் வழங்கப்பட்டது. தற்போது, குண்டுமேடு பகுதியில் 7 தெருக்கள் உள்ளன.

குண்டுமேடு மெயின் தெருவில் உள்ள பள்ளி மற்றும் வீட்டை ஒட்டி 2 மின் கம்பங்களில் சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து, அதில் உள்ள இரும்பு கம்பிகள் வெளியே தெரியும்படி எலும்பு கூடுபோல் காட்சியளிக்கிறது. பலத்த சூறைக்காற்று வீசினால், இடிந்து விழும்நிலையில் உள்ள மின் கம்பங்களை அகற்றி புதிய மின் கம்பங்கள் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள், படப்பை மின்வாரிய அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அளித்தனர். ஆனால் இதுவரை மின்கம்பங்களை மாற்றி அமைக்க அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

எனவே, பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன், இடிந்து விழும்நிலையில் உள்ள மின் கம்பங்களை அகற்றி, புதிய மின்கம்பங்கள் அமைக்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Kundumedu , Bomb, poles, civilians
× RELATED பெருங்களத்தூர் அருகே இளைஞர்...