×

இன்று பிளஸ்2 பொதுத்தேர்வு தொடக்கம் மாவட்டத்தில் 133 தேர்வு மையங்கள் அமைப்பு: 27 சிறை கைதிகள் தேர்வு எழுதுகின்றனர்

திருவள்ளூர்: பிளஸ்2 பொதுத்தேர்வு இன்று நடைபெற உள்ள நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் அமைத்துள்ள தேர்வு மையங்களில் அனைத்து முன்னேற்பாடுகளும் தயாராக உள்ளதாக மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

கொரோனா நோய்த் தொற்று 2020 ஆம் ஆண்டு முழு அளவில் தாக்கம் இருந்தது. ஆனால், அந்த சமயத்தில் பிளஸ் 2, பிளஸ் 1 பொதுத்தேர்வு நடைபெற்றது. இதையடுத்து பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, பொதுமுடக்கம் காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதேபோல் 2021 ஆம் ஆண்டிலும் பொதுமுடக்கம் தொடர்ந்த நிலையில், பொதுத் தேர்வு அனைத்தும் ரத்து செய்யப் பட்டன. இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பின் பொதுத் தேர்வு முழு அளவில் நடத்தப்பட உள்ளது. மேலும், கடந்த ஆண்டு, பொதுமுடக்கம் காரணமாக பள்ளிகள் தாமதமாக தொடங்கியது. இதனால் மார்ச் மாதம் நடத்த இருந்த பொதுத்தேர்வு, இந்த ஆண்டில் மே மாதம் தொடங்கி, தொடர்ந்து நடைபெற உள்ளது.

பிளஸ் 2 பொதுத்தேர்வு மே 5 ஆம் தேதி தொடங்கி, தொடர்ந்து 28 ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது. இத்தேர்வில் திருவள்ளூர் மாவட்டத்தில், மாணவர்கள் - 23043, மாணவிகள் - 20606 என மொத்தம் - 43649 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர். மேலும் மாவட்டத்தில் 193 சிறப்பு பள்ளி மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். இந்த சிறப்பு பள்ளி மாணவர்கள் தேர்வு எழுத கூடுதலாக ஒரு மணி நேரம் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புழல் மத்திய சிறைச்சாலையில் உள்ள சிறைக் கைதிகள் தேர்வு எழுதுவதற்காக சிறைச்சாலை வளாகத்திலேயே தனி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் 27 சிறைக் கைதிகள் தேர்வு எழுத உள்ளனர்.

மேலும் திருவள்ளூர் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வுக்காக 9 தனித்தேர்வு மையங்கள் உள்பட 133 தேர்வு மையங்கள் அமைத்து, அனைத்து முன்னேற்பாடு பணிகளும் தயார் நிலையில் உள்ளது. இதற்காக மாவட்டம் முழுவதும் 18 வினாத்தாள் கட்டுபாட்டு மையங்கள், ஒவ்வொரு மையத்திற்கும் 4 வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள் வீதம் 72 பேர் பணியில் ஈடுபடவும் உள்ளனர். இந்த வினாத்தாள் மையங்களுக்கு 24 மணிநேரமும் ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.

மேலும், தேர்வு முறைகேடுகளில் ஈடுபடுவோர்களை கண்காணிக்க மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப கண்காணிப்பாளர்கள் தலா 2 முதல் 4 பேர் நிரந்தரமாகவும், 250 நிரந்தர படை உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆறுமுகம் தலைமையில் தேர்வு மையங்களை சோதனை மேற்கொள்ள 35 பேர் கொண்ட பறக்கும் படையினர், மாவட்ட கல்வி அலுவலர் தலைமையில் தேர்வு மையங்களை கண்காணிக்க 40 பேர் கொண்ட பறக்கும் படையினரும், தேர்வு முடிந்ததும் விடைத்தாள் கட்டுகளை பெற 66 பேரும், 33 ஆயுதம் ஏந்திர போலீசாரும் தயார் நிலையில் உள்ளதாக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

Tags : Plus Two Exams, Prisons, Exams
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...