×

ஆட்டோ டிரைவரை தாக்கிய மீன் வியாபாரி கைது

ஆவடி: ஆட்டோ டிரைவரை தாக்கிய மீன் வியாபாரியை கைது செய்தனர். ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் செந்தில் நகர் பகுதியை சேர்ந்த மோகன் (35) ஆட்டோ ஓட்டுனர். இவர், அதே பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் (28) மீன்வியாபாரி. கடந்த 30ம் தேதி இரவு காமராஜர் தெருவில் ஆட்டோவை மோகன் வேகமாக ஓட்டியதால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே சதீஷ்குமார் வீட்டிலிருந்து மீன் வெட்டும் கத்தியை எடுத்து வந்து மோகன் தலையில் வெட்டியுள்ளார். தலையில் பலத்த காயம்பட்டவரை அருகில் இருந்தவர்கள் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து திருமுல்லைவாயில் போலீசார் வழக்கு பதிவுசெய்து தலைமறைவான சதீஷ்குமாரை கைதுசெய்து அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

பஸ் கண்ணாடியை உடைக்க முயன்ற போதை ஆசாமி கைது: ஆவடி: ஆவடி அருகில் அரசு பேருந்து கண்ணாடியை உடைக்க முயன்ற போதை ஆசாமியை போலீசார் கைது செய்தனர். ஆவடியில் இருந்து கோயம்பேடு செல்லும் அரசு பேருந்து (தடம் எண்-70ஏ) திருமுல்லைவாயில் பேருந்து நிலையத்தில் நேற்று முன்தினம் நின்று கொண்டிருந்தது. திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகாவை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (38). அரசு பேருந்து ஓட்டுநர் பேருந்தை ஓட்டி வந்திருந்தார்.

இந்நிலையில் அந்தப் பகுதியில் மதுபோதையில் இருந்த வாலிபர் பேருந்தின் கண்ணாடியை கையால் ஓங்கி அடித்துள்ளார். இதை தட்டிக்கேட்ட ஓட்டுனர் திருநாவுக்கரசையும் தாக்கமுயன்றார். பேருந்து முன்புறம் உள்ள கண்ணாடியை கையால் அடித்தார் பேருந்து கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டது. இதைத் தட்டிக்கேட்ட ஓட்டுனரை தாக்க முயன்றார்.

இதுகுறித்து திருமுல்லைவாயில் காவல் நிலையத்தில் திருநாவுக்கரசு புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கண்ணாடியை தாக்கிய திருமுல்லைவாயில் எட்டியம்மன் நகரை சேர்ந்த சேகரை (30) கைதுசெய்து அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

நகை, பணம் திருடிய சிறுவன் கைது: திருவள்ளூர்: பூந்தமல்லி அடுத்த நேமம் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி மனைவி அஞ்சலி (41). இவர் அதே பகுதியில் உள்ள குடிநீர் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். இவர் இரு தினங்களுக்கு முன் வீட்டை பூட்டிக்கொண்டு வேலைக்குச் சென்றிருந்தார்.  திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் வைத்திருந்த 3 சவரன்  நகைகள் மற்றும் ரூ. 40 ஆயிரம் ரொக்க பணம் திருடு போயிருந்தது பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
 
இது குறித்து அஞ்சலி வெள்ளவேடு போலீசில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் அன்புச்செல்வி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். இந்த விசாரணையில் புதுசத்திரத்தில் உள்ள செங்கல் சேம்பர் தங்கி வேலை செய்து வந்த ராஜபாளையத்தை சேர்ந்த கஜேந்திரன் மகன்  17 வயது சிறுவன் என்பவர் திருடியது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்து அவரிடமிருந்து ரூ. 16 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் அவரை பூந்தமல்லி கோர்ட்டில் நீதிபதி முன் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி அவரை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் விடுமாறு உத்தரவிட்டார். அதன்பேரில் சிறுவனை சென்னையில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்து விட்டனர்.

கார் கண்ணாடியை உடைத்து பணம் பறிப்பு: ஆவடி: ஆவடி அடுத்த பட்டாபிராம் பகுதியை சேர்ந்தவர் சத்திய சுப்பிரமணியன் (41). தனியார் நிறுவனத்தில் வாடகைக்கு கார் ஓட்டி வருகிறார். இந்நிலையில், நேற்றுமுன்தினம் அதிகாலை ஆவடி அருகே கருணாகரச்சேரி பகுதியை சேர்ந்த பயணிகளை இறக்கி விட்டுவிட்டு பின்னர் வண்டலூர், மீஞ்சூர் வெளிவட்ட சாலை வழியாகச் சென்றார். சுப்பிரமணியன் சர்வீஸ் சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரில் மூன்று சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் சுப்பிரமணியனை திடீரென தாக்கி, முன்புறம் உள்ள கார் கண்ணாடியை உடைத்தனர்.


 மேலும் அவரிடமிருந்து ரூ.3000த்தை வழிப்பறி செய்து அங்கிருந்து தப்பிச் சென்றனர்.இதுகுறித்து பட்டாபிராம் போலீசார் வழக்கு பதிவு செய்து வழிப்பறி ஆசாமிகளை தேடி வருகின்றனர்.



Tags : Fishmonger , Aavadi, Police, Fish Sales man, Arrested
× RELATED பாலக்காடு அருகே பைக் மீது கார் மோதல்: தலை துண்டாகி மீன் வியாபாரி பலி