×

ஏர் ஹாரன் பயன்படுத்திய வாகனங்களுக்கு ரூ.1.1 லட்சம் அபராதம்

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான பஸ்கள், லாரிகள், கனரக வாகனங்கள் சென்று வருகின்றன.   இச்சாலையில் வேகமாக செல்வதற்காக லாரிகளில், அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்களை பயன்படுத்துகின்றனர்.    இதனால் நோயாளிகள், முதியவர்கள்,  குழந்தைகள் என பல தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். பைக்கில் செல்வோர், இதுபோன்ற ஏர் ஹாரன் சத்தத்தால் விபத்தில் சிக்குகின்றனர்.

இதுகுறித்து, போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு, பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்தனர். அதன்படி, செங்கல்பட்டு சுங்கச்சாவடி அருகே  வட்டார போக்குவரத்து அலுவலர்  திருவள்ளுவன்  தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ஹமீதாபானு, ஆனந்தன், முரளி ஆகியோர் கொண்ட குழு நேற்று தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது, அதிக பாரம் ஏற்றி சென்ற வாகனங்கள், ஏர் ஹாரன் பயன்படுத்திய வாகனங்கள் என 10க்கும் மேற்பட்ட வாகனங்களை மடக்கி பிடித்தனர். வாகன ஓட்டிகளுக்கு ரூ.1.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஏர் ஹாரன் பொருத்தி  இயக்கப்படும், கனரக வாகனங்களை  பறிமுதல் செய்வதோடு, வாகன உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார போக்குவரத்து அலுவலர் திருவள்ளுவன் எச்சரித்தார்.


Tags : Air Horn , Airhorn, Vehicles, Fined, Chengalpatu
× RELATED ஏர் ஹாரன் பொருத்திய வாகனங்களுக்கு அபராதம்: அதிகாரிகள் நடவடிக்கை