அக்னி நட்சத்திரம் துவங்கிய முதல் நாளில் இடி, மின்னல் சூறைக்காற்றுடன் கனமழை: வெப்பம் தணிந்து மக்கள் நிம்மதி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக கோடை வெப்பநிலை பதிவாகியுள்ளது. இந்த வெயிலால் பொது மக்கள், முதியோர், குழந்தைகள், வாகன ஓட்டிகள், சாலையோர வியாபாரிகள் உள்பட பல்வேறு தரப்பினரும் கடும் அவதியடைந்து வருகின்றனர். வெயில், தாக்கத்தால் பொதுமக்கள் பலர் வீட்டை விட்டு வெளியேற முடியாமல், முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

நேற்று முதல் அக்னி நட்சத்திரம் தொடங்கி கத்திரி வெயிலின் தாக்கம் வெளிவர தொடங்கியது. அக்னி நட்சத்திரத்தின் முதல் நாளான நேற்று காலை முதலே காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெயில், அனைவரையும் வாட்டி வதைத்தது.

இந்நிலையில், நேற்று மதியம், திடீரென மேக மூட்டம் ஏற்பட்டு, வெயில் குறைந்தது. பின்னர், எதிர்பாராத விதமாக காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஓரிக்கை, செவிலிமேடு, ஒலிமுகமதுப்பேட்டை, பஸ் நிலையம், கலெக்டர் அலுவலகம், பெரியார் நகர், பொன்னேரிக்கரை, சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபாத் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கருமேகங்கள் சூழந்து சூறைக்காற்று, இடி, மின்னலுடன் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக மழை பெய்தது.

இந்த திடீர் கன மழையினால் சாலைகளில் மழைநீர், வெள்ளமாக கரைப்புரண்டு ஓடியது. இதில், வாகன ஓட்டிகள் பள்ளங்களை தெரியாமல் தடுமாறி சென்றனர். திடீர் மழையால், வெயிலின் தாக்கம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியதால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: