×

ஆயுதங்கள் சப்ளையை தடுக்க ரயில் நிலையங்கள் மீது தாக்குதல் மேலும் 2 நகரங்களுக்கு குறி வைக்கும் ரஷ்யா: உக்ரைனில் எல்லையை விரிவுப்படுத்த பேராசை

கீவ்: ஆயுதங்கள் சப்ளையை தடுக்க ரயில் நிலையங்கள், வெடிமருத்து கிடங்குகள் மற்றும் ராணுவ தளங்கள் மீது ரஷ்யா தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. இதன் மூலம், மேலும் 2 நகரங்களை கைப்பற்றும் முயற்சியில் ரஷ்யா இறங்கி உள்ளது. ஒவ்வொரு நகரத்தையும் கைப்பற்றி எல்லையை விரிவாக்கம் செய்ய அது திட்டமிட்டுள்ளது. உக்ரைன் மீது போரை தீவிரப்படுத்தி உள்ள ரஷ்யா, ஒவ்வொரு நகரத்தையும் கைப்பற்றி அந்நாட்டுடன் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி, துறைமுக நகரமான மரியுபோல், கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனில் உள்ள முக்கிய பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

மரியுபோலில் உள்ள இரும்பு தொழிற்சாலையை முற்றிலும் கைப்பற்றும் முயற்சியில் ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. அங்குள்ள பதுங்கு குழியில் 500க்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் குழந்தைகள் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், இன்னும் ஆயிரக்கணக்கானோர் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது. சில நாட்களாக மக்கள் வெளியேற்றத்திற்காக போர் நிறுத்தத்தை கடைபிடித்த ரஷ்யா, மீண்டும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதேபோல், கருங்கடல் ஒட்டி உள்ள ஒடேசா உள்ளிட்ட பகுதிகள் மீது ஏவுகணைகளை வீசி வருகிறது.

இந்த சூழலில், கைப்பற்றிய உக்ரைன் பகுதிகளை ரஷ்யாவுடன் இணைக்கும் முயற்சியில் ரஷ்யா தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக அமெரிக்க தெரிவித்துள்ளது. கிழக்கு பகுதியில் உள்ள டான்பாஸ் பிராந்தியத்தை பெருமளவில் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் ரஷ்யா கொண்டு வந்துள்ளது. இம்மாத இறுதியில் கிழக்கு உக்ரைனின் பெரும் பகுதி இணைக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இவ்வாறு ஒவ்வொரு நகரத்தையும் பிடித்து எல்லையை விரிவுப்படுத்தும் வேலையில் ரஷ்யா இறங்கி உள்ளது.

இந்நிலையில், கிழக்கு உக்ரைனில் உள்ள இசியம் அருகே ரஷ்யாவின் 22 பட்டாலியன் படை குழுக்கள் முகாமிட்டுள்ளன. இந்த குழுக்கள் டாங்கிகள், வான் பாதுகாப்பு மற்றும் பீரங்கிகளால் வலுப்படுத்தப்படுகின்றன. இந்த குழுக்கள் இசியமை தாண்டி சென்று கிராமடோர்ஸ்க் மற்றும் செவெரோடோனெட்ஸ்க் நகரங்களைக் கைப்பற்ற ரஷ்யா முயற்சி செய்து வருவதாக பிரிட்டன ராணுவம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், உக்ரைன் படைகள்,  ரஷ்யர்களை குறிவைத்து ஹோவிட்சர்கள் போன்ற நீண்ட தூர ஆயுதங்களை பயன்படுத்துவதால் ரஷ்யா மெதுவாக முன்னேறி வருவதாக கூறப்படுகிறது.  

போரால் சாலைகள், பாலங்கள் சேதமடைந்து இருப்பதால், தனது ராணுவத்திற்கு தேவையான ஆயுதங்களையும்,  வெளிநாட்டில் இருந்து அனுப்பப்பட்ட ஆயுதங்களையும், மக்களுக்கான அத்தியாவசிய பொருட்களையும் ரயில்கள் மூலம் எடுத்து செல்லும் முயற்சியில் உக்ரைன் ஈடுபட்டு வருகிறது. இதனால், ரயில் பாதைகள், கட்டமைப்புகளின் மீதான தாக்குதலை ரஷ்ய ராணுவம் தீவிரப்படுத்தி இருக்கிறது.

இது குறித்து உக்ரைன் ரயில்வே தலைவர் ஒலெக்சாண்டர் கமிஷின் கூறுகையில், ‘மத்திய மற்றும் மேற்கு உக்ரைனில் உள்ள ஆறு ரயில் நிலையங்களை ரஷ்யா தாக்கியதில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. தாக்குதல் காரணமாக குறைந்தது 14 ரயில்கள் தாமதமாக வந்தது. ரஷ்யாவின் இந்த தாக்குதலில் பலர் பலியாகி உள்ளனர்,’ என்று தெரிவித்தார்.

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெளிநாட்டு ஆயுதங்கள் கொண்டு செல்லப்படும் 6 ரயில் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு, முடக்கப்பட்டுள்ளது. 4 வெடி மருந்து கிடங்குகள் மற்றும் 40 உக்ரைன் ராணுவ இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது’ என்று தெரிவித்துள்ளது.

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்காதீங்கள்: உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா மீது ஐரோப்பா நாடுகள் கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன. ஆனால், எண்ணெய் இறக்குமதியை மட்டும் ரஷ்யாவிடம் இருந்து இந்நாடுகள் வாங்கி கொண்டு வருகின்றன. தற்போது, 6வது தொகுப்பாக ரஷ்யாவின் பொருளாதாரத்தை முடக்கும் அளவில், ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்குவதை தடை செய்யுமாறு 27 நாடுகளை கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் அழைப்பு விடுத்துள்ளார்.
* நூற்றுக்கணக்கான உக்ரைன் அகதிகள் அமெரிக்காவுக்குள் நுழைய அந்நாட்டு அனுமதிக்காக மெக்சிகோ நகரத்தில் காத்திருக்கின்றனர்.
* உக்ரைனுடன் ஒரு எல்லையை பகிர்ந்து கொள்ளும் ரஷ்யாவின் நட்பு நாடான பெலாரஸ், ​​உக்ரைன் ராணுவத்தின் தாக்குதல் திறனை அறிய, ‘ஆச்சரியமான சூழ்ச்சி’யை வகுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

Tags : Russia ,Ukraine , Weapons supply, railway stations, attack, Russia, Ukraine, greed
× RELATED ரஷ்ய மின்நிலையங்கள் மீது உக்ரைன்...