ரெப்போ வட்டி திடீர் உயர்வு வீடு, வாகன கடன் வட்டி உயரும்: சிறப்பு கூட்டத்தில் ரிசர்வ் வங்கி முடிவு

மும்பை: ரெப்போ வட்டி உயர்ந்ததால் வீடு, வாகன கடன் வட்டி, தவணை தொகை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி 2 மாதங்களுக்கு ஒரு முறை நிதிக்கொள்கை மறு சீராய்வு கூட்டம் நடத்தி, வட்டி விகிதம் உட்பட முக்கிய முடிவுகளை எடுக்கிறது. இதன்படி கடந்த மாதம் சீராய்வு கூட்டம் நடத்தப்பட்டது. ஆனால், வட்டி விகிதத்தில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. அடுத்த கூட்டம் ஜூன் மாதம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், பண வீக்கம் அதிகரித்து வரும் சூழ்நிலையில் ரிசர்வ் வங்கியின் சிறப்பு சீராய்வு கூட்டம், அதன் கவர்னர் சக்தி காந்ததாஸ் தலைமையில் கடந்த 2ம் தேதி துவங்கியது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகளை சக்தி காந்ததாஸ் நேற்று அறிவித்தார்.

இதன்படி, வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகியகால  ரெப்போ வட்டி 0.4 சதவீதம் அதிகரித்து 4.4 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடைசியாக கடந்த 2020ம் ஆண்டு மே மாதம் நடந்த கூட்டத்தில்,  ரெப்போ வட்டி குறைக்கப்பட்டது. இந்நிலையில், ரஷ்யா  - உக்ரைன் போர் காரணமாக பண வீக்கம் அதிகரித்துள்ளதால், அதனை கட்டுப்படுத்த வட்டியை உயர்த்தி ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதுபோல், சிஆர்ஆர் எனப்படும் வங்கிகளின் ரொக்க கையிருப்பு விகிதம் 4.5 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், வங்கிகளின் பண புழக்கத்தில் சுமார் ரூ.87,000 கோடி குறைய வாய்ப்புகள் உள்ளன.

ரெப்போ அடிப்படையில் வங்கிகள் தாங்கள் வழங்கும் கடன்களுக்கான வட்டியை நிர்ணயம் செய்கின்றன.  சமீபத்தில்தான் பாரத ஸ்டேட் வங்கி உட்பட சில வங்கிகள் கடன் வட்டியை உயர்த்தி அறிவித்தன. தற்போது ரெப்போ வட்டி உயர்வால் வீடு, வாகன மற்றும் தனி நபர் கடன்கள் மேலும் அதிகரிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.  புதிய ரெப்போ வட்டி உயர்வு உடனடியாக அமலுக்கு வருவதாகவும், அடுத்த கூட்டம் ஜூன் 6ம் தேதி தொடங்கி 8ம் தேதி வரை நடைபெற உள்ளது.

ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டியை திடீரென உயர்த்தியதால், பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு நேற்று ஒரே நாளில் ரூ.6.27 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது. வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 1,306.96  புள்ளிகள் சரிந்து,  55,669.03 புள்ளிகளாகவும் தேசிய பங்குச்சந்தை குறியீடான நிப்டி, 391.50 புள்ளிகள் சரிந்து 16,677.60  புள்ளிகளாகவும் இருந்தது.

Related Stories: