இந்நாள், முன்னாள் நெ.1 வீரர்கள்: ஜோகோவிச்-மர்ரே மோதல்

மாட்ரிட்: கிராண்ட் ஸ்லாம் போட்டியான  பிரஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டிக்கு முன் முக்கிய களிமண் தரை போட்டியாக ஸ்பெயினில் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி நடக்கிறது. அதில் முன்னாள் நெம்பர் ஒன் வீரர் இங்கிலாந்தைச் சேர்ந்த  ஆண்டி மர்ரே(34வயது, 78வது ரேங்க்) களமிறங்கி உள்ளார். காயத்தால் அவதிப்படுவதால் சர்வதேச போட்டிகளில் அவர் அதிகம் விளையாடுவதில்லை. பிரெஞ்ச் ஓபனை கருத்தில் கொண்டு மாட்ரிட் ஓபனில் விளையாடும் மர்ரே  முதல் சுற்றில்  ஆஸ்திரிய வீரர் டொமினிக் தியம்(28வயது, 91வது ரேங்க்), 2வது சுற்றில் கனடா வீரர் டெனிஸ் ஷபோவலோவ்(23வயது, 16வது ரேங்க்) ஆகியோரை வீழ்த்தி  3வது சுற்றுக்கு முன்னேறினார்.

அதேபோல் நெம்பர்  ஓன் வீரர் செர்பியாவின் நோவக் ஜோகோவிச்(34வயது) நேரடியாக 2வது சுற்றில் களம் கண்டார். அந்த சுற்றில் பிரான்சின் கேல் மோன்ஃபில்சை(35வயது, 21வது ரேங்க்) வென்று 3 வது சுற்றுக்குள் நுழைந்துள்ளார். இன்று நடைபெறும் காலிறுதிக்கு முந்தைய 3வது சுற்றில் முன்னாள் நெம்பர் ஒன் வீரர் மர்ரே,  இந்நாள் நெம்பர் ஒன் வீரர் ஜோகோவிச்சுடன் மோத உள்ளனர்.

இந்த இருவரும் இதுவரை மோதிய 36ஆட்டங்களில்   ஜோகோவிச் 25 ஆட்டங்களிலும், மர்ரே 11 ஆட்டத்திலும் வெற்றி வாகை சூடியுள்ளனர். இந்த 36 ஆட்டங்களில் 19 ஆட்டங்கள் இறுதி ஆட்டங்கள். மேலும் 3 ஆட்டங்கள் மட்டுமே  காலிறுதிக்கு முந்தைய ஆட்டங்கள். மற்றவை  எல்லாம் காலிறுதி, அரையிறுதி ஆட்டங்கள். இப்போது 4வது முறையாக காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இருவரும் மோதுகின்றனர்.

Related Stories: