இந்தியாவில் 2020ம் ஆண்டில் கொரோனாவால் மட்டுமே மரணம் அதிகமாகவில்லை: நிதி ஆயோக் உறுப்பினர் விளக்கம்

புதுடெல்லி: கொரோனா மரணங்களால் மட்டும் கடந்த 2020ம் ஆண்டில் இறப்பு பதிவுகள் அதிகரிக்கவில்லை என்று நிதி ஆயோக் உறுப்பினர் விகே.பால் தெரிவித்துள்ளார். நிதி ஆயோக் உறுப்பினரும், கொரோனா பணிக்குழு தலைவருமான விகே.பால் கூறியதாவது: இந்தியாவை பொறுத்தவரை சில ஏஜென்சிகளால் கொரோனா இறப்புக்கள் குறித்த எண்ணிக்கை மிகைப்படுத்தி கூறப்படுவது நிறுத்தப்பட வேண்டும். எடுத்துக்காட்டாக, 2020ம் ஆண்டு ஜனவரி முதல் 2021ம் ஆண்டு டிசம்பர் வரையிலான கால கட்டத்தில் கொரோனா இறப்புக்கள் பதிவானதை காட்டிலும், 8 மடங்கு அதிகமாக இறப்புகள் பதிவாகி இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றினால் ஆவணப்படுத்தப்பட்ட இறப்புக்கள் சுமார் 4,89,000. லான்செட் தனது ஆய்வு அறிக்கையில் இந்தியாவில் கொரோனாவால் இந்த கால கட்டத்தில் ஏற்பட்ட இறப்புக்கள் உலகிலேயே அதிகபட்சமாகும். அதாவது சுமார் 40.7 லட்சமாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இது முற்றிலும் தவறானது. பிறப்பு மற்றும் இறப்பு பதிவுகளை வழங்கும் (சிஆர்எஸ்) சிவில் ரெஜிஸ்ட்ரேசன் சிஸ்டமானது, 2020ம் ஆண்டுக்கான அறிக்கையை நேற்று முன்தினம் வெளியிட்டது. இதன் அடிப்படையில் 2019ம் ஆண்டு 76.4லட்சம் இறப்புக்கள் பதிவாகி உள்ளது.

2020ம் ஆண்டில் இது 81.2லட்சமாக அதிகரித்துள்ளது. 6.2சதவீதம் அதிகரித்துள்ளது. சிஆர்எஸ் அறிக்கையின்படி 4.75லட்சம் இறப்புக்கள் 2020ம் ஆண்டில் அதிகரித்துள்ளது. 2018 மற்றும் 2019ம் ஆண்டில் இது 6.9லட்சம் இறப்புக்கள் அதிகரித்துள்ளன. சொத்துக்கள் மற்றும் பிற நோக்கங்களுக்காக இறப்பு சான்றிதழ்கள் அவசியம் என்பதை மக்கள் தற்போது உணர்ந்திருக்கின்றனர். இதன் காரணமாக இறப்புக்களை பதிவு செய்வது அதிகரித்துள்ளது. எளிமையான நடைமுறை மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் காரணமாக மக்கள் முன்னோக்கி செல்கின்றனர். கொரோனா தொற்று இல்லாத கடந்த ஆண்டுகளில் அதிகப்படியான இறப்புக்கள் பதிவாகி உள்ளன.

எனவே இறப்புக்கள் பதிவு அதிகரிப்புக்கு வேறுபல காரணங்களும் இருக்கின்றது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மீண்டும் 3 ஆயிரம் ஒன்றிய சுகாதார துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

* நாட்டில் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 3,205 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 88 ஆயிரத்து 118 ஆக அதிகரித்துள்ளது.

* கேரளாவில் 29 பேர், மகாராஷ்டிரா, டெல்லியில் தலா ஒருவர் என மொத்தம் 31 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். இதன் மூலம், மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 23 ஆயிரத்து 920 ஆக உயர்ந்துள்ளது.

* நாடு முழுவதும் 19,509  பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories: