மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் கலாச்சார மையம்: அமைச்சர் சேகர் பாபு அறிவிப்பு

சென்னை: சட்டப்பேரவையில் நேற்று இந்து சமய அறநிலையத்துறை மீதான மானியக்கோரிக்கையின் போது அமைச்சர் பி.கே.சேகர்பாபு வெளியிட்ட அறிவிப்பு: மதுரை மாவட்டம் அழகர் கோயில் கள்ளழகர் கோயில் வளாகத்தில் உள்ள பெரியாழ்வார் திருவரசு ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும். செங்கல்பட்டு மாவட்டம், நெம்மேலி ஆளவந்தார் திருவரசு ரூ.1 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும். நகர்ப்புறங்களில் அமைந்துள்ள 200 சிறிய திருக்கோயில்களுக்கு ரூ.20 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.

தமிழர் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை விளக்கும் வகையில் கலைநிகழ்ச்சிகள் நடத்துவதற்கான கலாச்சார மையம் முதற்கட்டமாக மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் அமைக்கப்படும். அம்மையத்தில் ஆன்மிக நூலகமும் அமைக்கப்படும். மேலும், மீட்கப்பட்ட தெய்வத் திருமேனிகள் அம்மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்படும். ஈரோடு மாவட்டம் பண்ணாரி மாரியம்மன் கோயிலில் ஒன்பது நிலை ராஜகோபுரம் ரூ.11.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம் கோரக்குட்டை இளையபெருமாள் கோயிலில் ஏழு நிலை ராஜ கோபுரம் ரூ.5.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.

கோவை மாவட்டம், தேக்கம்பட்டி வனபத்திரகாளியம்மன் கோயிலில் ஏழு நிலை ராஜகோபுரம் ரூ.5.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும். திருவாரூர் மாவட்டம், குடவாசல் கோனேஸ்வர சுவாமி கோயிலில் 5 நிலை ராஜகோபுரம் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும். நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம், எஸ்.பழைய பாளையம் அங்காளம்மன் கோயிலில் ஐந்து நிலை ராஜகோபுரம் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: