×

போலீசாருக்கு எதிராக சமூகவலைதளத்தில் வீடியோ தாம்பரம் காவல் ஆணையரகம் விளக்கம்

தாம்பரம்: கடந்த 1ம் தேதி மாலை சிட்லபாக்கம் காவல் நிலைய ரோந்து வாகன ஓட்டுனர் சுரேஷ்குமார் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் ஸ்ரீதரன் ஆகியோர் குரோம்பேட்டை, ராதா நகர் பிரதான சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் செல்போன் பேசியபடி வந்த விக்னேஸ்வரன் என்பவரை மடக்கி ஏன் செல்போன் பேசிக்கொண்டு வண்டி ஓட்டுகிறாய் என்று கேட்டு நிற்க வைத்த போது விக்னேஸ்வரன் தனது அண்ணன் சிலம்பரசனுக்கு தொலைபேசி மூலம் தகவல் கொடுத்து சம்பவ இடத்திற்கு வர வைத்துள்ளார்.

குடிபோதையில் வந்த சிலம்பரசன், நீ வண்டியை எடுத்துக்கொண்டு செல் எவனும் எதுவும் செய்ய முடியாது என்று பேசி காவலரிடம் இருந்த சாவியை பிடுங்க முற்பட்டு தகராறு செய்து சட்டை காலரைப்பிடித்து இழுத்ததில் சுரேஷ்குமார் கழுத்தில் கிடந்த தங்க செயின் அறுந்து உள்ளது.பின்னர் முரண்டு பிடித்த சிலம்பரசனை உடனிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் ஸ்ரீதரன் உதவியுடன் காவல் நிலையம் அழைத்து வந்து வழக்கு பதிவு செய்து பின்னர் மருத்துவமனை அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவர் குடிபோதையில் இருந்ததற்கான மருத்துவச் சான்றிதழ் பெறப்பட்டு பின்னர் சிறையில் அடைத்தனர்.

இதேபோல, கடந்த ஆண்டு டிசம்பர் 19ம் தேதி சிட்லபாக்கம் காவல் நிலைய பயிற்சி உதவி ஆய்வாளர் சந்தரசேகரன் ராதாநகர் போலீஸ் பூத் அருகில் பணியில் இருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேரை நிறுத்தி எதற்காக 3 பேர் ஒரு வாகனத்தில் வருகிறீர்கள் என கேட்டபோது உதவி ஆய்வாளரிடம் சிலம்பரசன் தகராறில் ஈடுபட்டு தாக்க முயற்சித்ததால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. காவல்துறையினரின் கடமையை செய்ய விடாமல் தடுத்து தகராறில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டுள்ள சிலம்பரசன் சென்னை பெருநகர ஆயுதப்படையில் பணிபுரியும் பெண் காவலர் சிலம்பரசியின் சகோதரர் ஆவார்.

இந்நிலையில் சிட்லபாக்கம் போலீசார் இடியாப்பம், புட்டு கேட்டு தராததால் சிலம்பரசன் மற்றும் அவரது தம்பி விக்னேஸ்வரன் ஆகியோர் மீது காழ்ப்புணர்ச்சியின் காரணமாக பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்டு பழிவாங்கப்பட்டுள்ளனர் என சமூகவலைதளங்களில் பரவி வரும் செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என தாம்பரம் காவல் ஆணையரகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Tags : Tambaram Police Commission , Police, Social Network, Tambaram Police Commission
× RELATED மக்கள் தொகை அடிப்படையில் புதிதாக...