மாணவர்கள் மகரிஷி ஷரக்சபத் உறுதிமொழி ஏற்ற விவகாரம் மதுரை மருத்துவக்கல்லூரி முதல்வராக ரத்தினவேல் நீடிப்பார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

சென்னை: சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு பதிலளித்து  மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: மருத்துவக்கல்லூரி மாணவர்கள் பல ஆண்டுகளாக ஹிப்போகிரட்டிக் உறுதிமொழிதான் எடுத்து வருகிறார்கள். பிப்ரவரி 7ம் தேதி, தேசிய மருத்துவ ஆணையம் ஹிப்போகிரட்டிக் உறுதிமொழிக்குப் பதிலாக  மகரிஷி ஷரக்சபத் என்கின்ற ஒரு புதிய உறுதிமொழியை ஏற்கவெண்டுமென்று வலைதளங்களில் செய்திகள் பரவியது. உடனே துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அனைத்து மருத்துவக்கல்லூரி முதல்வர்களுக்கும், தேவையில்லாமல் சர்ச்சைகளில் சிக்கிக் கொள்ள வேண்டாம்.

புதிய உறுதிமொழியை ஏற்றுக்கொள்வதற்கு உறுதுணையாக இருக்கக்கூடாது என அறிக்கை, அதற்கு பிறகு 11ம் தேதியன்று டி.எம்.இ.,யும், மருத்துவக் கல்லூரிகளுக்கு இந்த ஆணையை அனுப்பியது. மார்ச் 29ம் தேதி மாநிலங்களவையில் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன்பவார் மகரிஷி ஷரக்சபத் பற்றி தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்திருக்கிற பிராமணத்தை நாங்கள் ஏற்றுக் கொள்ள சொல்லவில்லை என்று வெளிப்படையாகவே சொல்லியிருக்கிறார். இந்த நிலையில், மதுரை கல்லூரியிலும், ராமநாதபுரம் கல்லூரியிலும் மகரிஷி உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டதாக செய்திகள் வெளியானது. உடனே மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வர், காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டார். மன்னனின் எதிரிகளுக்கும், மன்னனை வெறுப்பவர்களுக்கும், மக்களால் வெறுக்கப்படுபவர்களுக்கும்  நான் மருத்துவம் பார்க்க மாட்டேன் என்று சமஸ்கிருத உறுதிமொழியில் சொல்லப்படுகிறது.

மேலும், தீயவர்களுக்கும், தவறான வழியில் செல்பவர்களுக்கும், இறக்கும் தருவாயில் உள்ளவர்களுக்கும், மருத்துவம் பார்க்க மாட்டேன் என்றும் சொல்கிறது. கணவரோ அல்லது வேறு துணையோ இல்லாமல், தனியாக வரும் பெண்களுக்கு நான் மருத்துவம் பார்க்க மாட்டேன். ஒன்று கணவருடன் வரவேண்டும், அல்லது யாராவது ஓர் ஆண் துணையுடன் கூட வரவேண்டும். இல்லையென்றால் அந்தப் பெண் செத்து மடிய வேண்டியதுதான். நான் மருத்துவம் பார்க்க மாட்டேன் என்று மகரிஷி ஷரக்சபத் உறுதிமொழி சொல்கிறது.  

இதை இந்தியா முழுவதும் திணிப்பதற்கு ஏதோ ஓர் கூட்டம் முனைந்திருக்கிறது என்றாலும் கூட, மதுரை மருத்துவ கல்லூரி முதல்வர் என்னை வீட்டில் சந்தித்து, தெரியாமல் நடந்து விட்டது, இனிவரும் காலங்களில் இதுபோன்று நடக்க வாய்ப்பில்லை என்றார். அவர் வருத்தமும் தெரிவித்திருப்பதால் அப்பணியில் அவர் மீண்டும் நீடிக்கிறார். எதிர்காலத்தில் இதுபோன்ற புதிய உறுதிமொழிகளை எடுத்தால் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: