இந்து மதத்தின் திரிகள் நாங்கள்: பேரவையில் அமைச்சர் சேகர்பாபு பேச்சு

சென்னை:  சட்டப்பேரவையில் நேற்று இந்து சமய அறநிலையத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது: இந்த அரசு இந்து மதத்திற்கு எதிரான அரசு என்ற ஒரு வாதத்தை வைக்கிறார்கள். நாங்கள் இந்து மதத்திற்கு எதிரானவர்கள் அல்ல. இந்து மதத்தை பொறுத்தவரையில் நாங்கள் திரிகள். தீபமாக ஒளி தரும் திரிகள் தான் திமுக என்பதை பதிவு செய்துகொள்கிறேன். கடந்த ஆண்டில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் 112. இந்த அறிவிப்புகளில் 1691 பணிகள் இடம்பெற்றிருந்தது. இதில் 80க்கும் மேற்பட்ட பணிகள் தற்போது செயல்வடிவம் பெற்றுள்ளது. இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ரூ.2,566 கோடி மதிப்பிலான சொத்துகள் மீட்கப்பட்டுள்ளது. இந்த சொத்துக்கள் மீட்கும் வேட்டை தொடரும். இந்த அரசு இதுவரையில் 300க்கும் மேற்பட்ட கோயில்களுக்கு கடந்த ஆண்டு திருப்பணிகளுக்கு உத்தரவிட்டது.

ஐந்து ஆண்டுகள் நிறைவு பெறும் போது நிச்சயம் 15 ஆயிரம் கோயில்களுக்கு குடமுழுக்கை நிறைவு செய்வோம் என உறுதிபட கூறுகிறேன். 503 கோயில்களுக்கு 110.83 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளோம். முதன்முறையாக ஒரே உத்தரவில் 108 வாகனங்களை வாங்கி தந்துள்ளோம். 8 கோயில்களில் தரமான விபூதி, குங்குமம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், இதுவரையில் தரமான விபூதி, குங்குமம் கூட இல்லை. இது ஆன்மிக அரசு என்பதற்கு இதுஒரு உதாரணம். இந்த ஆட்சி தான் பொற்கால ஆட்சியாக உள்ளது. கூடுதலாக 3 கோயில்களுக்கு அன்னதான திட்டத்தை முதல்வர் அளித்துள்ளார். 10 கோயில்களில் முழுநேர பிரசாதம் வழங்கப்படுகிறது. வடபழனியில் இந்த திட்டத்தை துவக்கி வைத்தோம்.

 

சேலத்தில் வனபத்திரகாளி அம்மன் கோயில் வாசல் 8 ஆண்டுகள் மூடப்பட்டிருந்தது. ஏகம்பரநாதர் கோயில் ஆயிரங்கால் மண்டபம் 13 ஆண்டுகள் மூடப்பட்டிருந்தது. இப்படி மூடப்பட்டிருந்த வாசல்களை திறந்துவைத்த பெருமை நமது முதல்வரையே சாரும். நடந்து முடிந்த ஆட்சி இந்து சமய அறநிலையத்துறையின் ஆன்மிக ஆட்சி அல்ல. அது இறை பக்தர்களுக்கு அடிப்படை தேவைகளை மறுத்த ஆட்சி. நீண்ட காலம் நிலுவையில் இருந்த ரோப் காரை திறந்துவிட்டதாக சொன்னீர்கள். ஆனால், அதை பயன்பாட்டிற்கு கொண்டுவந்தது இந்த அரசு. ராமேஸ்வரம், பழனி, சமயபுரம் 3 கோயில்களுக்கும் முழுவதும் வரைபடம் தயாரிக்கப்பட்டு இந்த ஆண்டு இறுதிக்குள் திருப்பதிக்கு நிகராக இந்த கோயில்களை கொண்டுவருவோம். இவ்வாறு பேசினார்.

Related Stories: