×

கோடை வெயில் வாட்டிய நிலையில் பல மாநிலங்களில் மழை: ஜம்முவில் 2 சிறுமிகள் பலி

ஜம்மு: டெல்லி, தெலங்கானா, பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீரில் நேற்று கனமழை பெய்தது. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கோடை வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், டெல்லியின் சில பகுதிகளில் நேற்று ஆலங்கட்டி மழை பெய்தது. ரோகினி, பிதம்பரா, பஸ்சிம் விஹார் உள்ளிட்ட இடங்களில் நேற்று பிற்பகலில் ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் பொதுமக்கள் வெப்பத்தின் தாக்குதலில் இருந்து சற்று விடுபட்டுள்ளனர்.

இதேபோல் கொளுத்தும் வெயிலில் தவித்த ஐதராபாத்தில் நேற்று அதிகாலை திடீரென மழை வெளுத்து வாங்கியது. பலத்த காற்று மற்றும் மின்னலுடன் மழை கொட்டித் தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.  சித்திப்பூர் மாவட்டத்தில் உள்ள ஹப்சிபூரில் அதிகபட்சமாக நேற்று காலை 6 மணி வரை 108 மி.மீ மழை பதிவாகி உள்ளது.

சண்டிகர் உட்பட பஞ்சாப் மற்றும் அரியானாவின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று மழை கொட்டி தீர்த்தது. கடந்த சில நாட்களாக அதிகபட்ச வெப்பநிலை நீடித்து வந்த நிலையில் திடீர் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஜம்முவிலும் 2வது நாளாக நேற்றும் இடி மின்னலுடன் பலத்த மழை நீடித்தது. இதன் காரணமாக ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் மண்சரிவு ஏற்பட்டது.

உதம்பூர் மாவட்டத்தில் உள்ள மன்வால் பகுதியில் 13 வயது சிறுமி மின்னல் தாக்கியும், தோடா மாவட்டத்தில் காட்டில் இருந்து விறகு எடுத்து திரும்பிய 18 வயது இளம்பெண் மீது மரம் விழுந்தும் இறந்தனர். சம்ரோலியில் மண் சரிவு ஏற்பட்டதால் ஜம்மு- ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டது.


Tags : Jammu , Summer sun, rain in many states, Jammu, girls killed
× RELATED நாட்டில் வலுவான அரசாங்கத்தை...