ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான ரூ.108 கோடி சொத்து மீட்பு: அறநிலையத்துறை நடவடிக்கை

சென்னை: மாமல்லபுரம் ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான ரூ.108 கோடி மதிப்பிலான சொத்துக்களை இந்து சமய அறநிலையத்துறை மீட்டுள்ளது. இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை:

முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவுரையின்படி செங்கல்பட்டு மாவட்டம்,  மாமல்லபுரம் ஆளவந்தார் அறக்கட்டளைக்குச் சொந்தமான 11 நிலங்களில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு மீண்டும் அறக்கட்டளை வசம் சுவாதீனம் பெறப்பட்டுள்ளது.

ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலங்களை சுமார் 20 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்திருந்த 46 நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி தற்போது முதற்கட்டமாக 22 ஆக்கிரமிப்பாளரை வெளியேற்றுவதற்கு பட்டிபுலம் கிராமத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் கிழக்கு புறமாக பண்ணை வீடுகளாகவும், பொழுதுபோக்கு விடுதிகளாகவும், தோட்டங்களாகவும், அதில் மதில் சுவர் ஏற்படுத்தி ஆக்கிரமிப்பு செய்து வந்த இடங்களையும், சாலுவான்குப்பம் கிராமத்தில் இறால் குஞ்சு பொறிப்பகம் உணவகம், பேக்கிரி, மதில் சுவர்கள் அமைத்தும் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு அறக்கட்டளை வசம் சுவாதீனம் எடுக்கப்பட்டது.

ஆக்கிரமிப்புகளில் இருந்து மீட்கப்பட்ட நிலத்தின் சந்தை மதிப்பு சுமார் ரூ.108 கோடி ஆகும். ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட நிலங்களில் மீண்டும் ஆக்கிரமிப்பு ஏற்படுவதை தடுக்கும் வகையில் அரசு நிதி மூலம் சுமார் ரூ.10.50 கோடியில் மதில் சுவர்கள் அமைக்க அரசாணை பெறப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கப்பட உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: