×

கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை திடீர் உயர்வு: சிறு காய்கறி கடைகள் இயங்கும்

சென்னை: வணிகர் தினத்தை முன்னிட்டு இன்று கோயம்பேடு மார்க்கெட்டுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக நேற்று கோயம்பேடு மார்க்கெட்டுக்கு 600 வாகனங்களில் இருந்து 6,000 டன் காய்கறிகள் வந்து குவிந்தன.
இந்நிலையில், நேற்று முன்தினம் ஒரு கிலோ பீன்ஸ் ரூ.50க்கும், வெண்டைக்காய் ரூ.15க்கும்,  நாட்டு தக்காளி ரூ.35க்கும்,  பெங்களூரூ தக்காளி ரூ.40க்கும், கேரட் ரூ.25க்கும், அவரக்காய் ரூ.30க்கும், பீட்ரூட் ரூ.16க்கும், சவ்சவ் ரூ.18க்கும், கத்தரிக்காய் ரூ.20க்கும் என விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், இன்று மார்க்கெட் விடுமுறை என்பதால் நேற்று காய்கறிகள் வாங்க மக்கள் குவிந்தனர். இதனால் காய்கறிகள் விலையும் திடீரென உயர்ந்தது. இதனை தொடர்ந்து நேற்று காலை  ஒரு கிலோ   பெங்களூரு தக்காளி ரூ.40லிருந்து  ரூ.50க்கும்,  கேரட் ரூ.25லிருந்து ரூ.35க்கும்,  அவரக்காய் ரூ.30லிருந்து ரூ.40க்கும், பீட்ரூட் ரூ.16லிருந்து ரூ.25க்கும், வெண்டைக்காய் ரூ.20லிருந்து ரூ.30க்கும், பீன்ஸ் ரூ.50லிருந்து  ரூ.70க்கும், சவ்சவ் ரூ.18லிருந்து ரூ.25க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிலோ மாங்காய் ரூ. 10க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் நேற்று  ரூ.20க்கு விற்பனை செய்யயப்பட்டது.

இது குறித்து, கோயம்பேடு வியாபாரிகள் கூறுகையில், வணிகர் தினத்தை முன்னிட்டு, கோயம்பேடு மார்க்கெட் விடுமுறைக்கு விடப்படுவதால்,  நேற்று காலை 600 வாகனங்களில் 6000 டன் காய்கறிகள் வந்து குவிந்தன. இருப்பினும் காய்கறி விலைகள் உயர்ந்தது. வாடிக்கையாளர்கள் காய்கறிகள் கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் அதிக விலைக்கு விற்பனை செய்தாலும் அதை  வாங்கி சென்றனர். காய்கறி கூட்டமைப்பு சங்கம், வணிகர் தினத்தை முன்னிட்டு  விடுமுறை என்று அறிவித்திருந்தாலும், சிறு காய்கறிகடைகள், பூ மார்கெட், பழ மார்கெட்,  உணவு தானிய மார்கெட் வழக்கம்போல் இயங்கும். எனவே,  வாடிக்ககையாளர்கள் வந்து வாங்கி கொள்ளலாம் என்று கூறினர்.



Tags : Coimbatore , Vegetable prices rise sharply in Coimbatore market: Small vegetable shops are operating
× RELATED பறக்கும் படையால் வியாபாரம் பாதிப்பு