×

பீமன்தாங்கல் கிராமத்தில் ரூ.200 கோடி நிலமோசடி வழக்கில் தாசில்தார் கைது

சென்னை: ஸ்ரீபெரும்புதூர் அருகே பீமன்தாங்கல் கிராமத்தில் ரூ.200 கோடி நில மோசடி வழக்கில் திடீர் திருப்பமாக தாசில்தார் கைது செய்யப்பட்டார். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தாலுகா, பீமன்தாங்கல் கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலை விரிவுபடுத்தும் பணி அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது. அப்போது, அரசு சாலைக்காக எடுக்கப்பட்ட நிலங்களுக்கு இழப்பீடு வழங்குவதில் ரூ.200 கோடி வரை முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலராக இருந்த நர்மதா உள்பட 8 அரசு அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
 
பீமன்தாங்கல் கிராமத்தில் உள்ள பல ஏக்கர் நிலங்கள் முறைகேடாக பட்டா பெற்றிருப்பது குறித்து, தமிழக நில நிர்வாக ஆணையத்துக்கு கடந்த ஆண்டு ஏராளமான புகார்கள் வந்தன. இதை தொடர்ந்து வருவாய்த்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

 அந்த விசாரணையில், பல ஆண்டுகளுக்கு முன், அனாதீனம் மற்றும் மேய்க்கால் புறம்போக்கு நிலங்களுக்கு போலியான ஆவணங்கள் தயாரித்து, அதன் மூலம் பல ஏக்கர் நிலங்கள் பீமன்தாங்கல் கிராமத்தில் முறைகேடாக பட்டா பெற்றது தெரிந்தது. இதையடுத்து, பீமன்தாங்கல் கிராமத்தில் முறைகேடாக பெற்ற 36 ஏக்கர் நிலத்துக்கான பட்டாவை நில நிர்வாக ஆணையம் ரத்து செய்து உத்தரவிட்டது.

 மேலும் இதுதொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் தீவிர விசாரணை நடத்தினார். அதில் 46 ஏக்கர் நிலம் முறைகேடாக பட்டா பெற்றது தெரியவந்தது. இதை தொடர்ந்து அதன் பட்டாவை, அப்போதைய மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம் ரத்து செய்து உத்தரவிட்டார். இதன் மூலம் பீமன்தாங்கல் கிராமத்தில் மொத்தம் 82 ஏக்கர் நிலத்தின் பட்டா ரத்து செய்யப்பட்டது. இதைதொடர்ந்து, முறைகேட்டில் ஈடுபட்ட அசோக் மேத்தா, செல்வம் ஆகியோரை காஞ்சிபுரம் மாவட்ட நில அபகரிப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். இதற்கிடையில், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
 
இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன், தற்போதைய தேர்தல் பிரிவு தாசில்தார் தேன்மொழியை, போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை, செங்கல்பட்டு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். கடந்த சில மாதங்களாக மந்தமாக இருந்த நில மோசடி வழக்கு, தற்போது மீண்டும் சூடுபிடித்துள்ளது.

Tags : Dasildar ,Bhimanthangal , Dasildar arrested in Rs 200 crore land scam in Bhimanthangal village
× RELATED தேர்தல் பறக்கும் படை சோதனை:...