மூத்த குடிமக்கள் பராமரிப்பு சட்டத்தின்கீழ் 292 புகார்கள் நிலுவையில் உள்ளன: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

சென்னை: பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு சட்டத்தின் கீழ்  அளிக்கப்படும் புகார்களின் மீது சட்டப்படி 90 நாட்களுக்குள் தகுந்த உத்தரவை  பிறப்பிக்காவிட்டால் சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியர்  பொறுப்பாக்கப்படுவார் என்று எச்சரிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை  உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

 

சென்னை கொடுங்கையூரை சேர்ந்த 66  வயது சதாசிவம் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில்,  தனது வீட்டுக்குள் மகன் மதன் அத்துமீறி நுழைந்து தனக்கு சொந்தமான சொத்து  ஆவணங்களை அபகரித்து சென்றுள்ளார். அந்த ஆவணங்களை  மீட்டுதரக்கோரியும், பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நலன் மற்றும்  பராமரிப்பு சட்டத்தின் கீழ் மகனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரியும்  மாவட்ட கலெக்டருக்கு புகார் அனுப்பினேன். அந்த மனுவை பரிசீலித்து நடவடிக்கை  எடுக்குமாறு சென்னை கலெக்டருக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

 

இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் ஜெயப்பிரகாஷ் ஆஜரானார். வழக்ைக விசாரித்த நீதிபதி, கடந்த ஆண்டு அளித்த புகார்  மீது நடவடிக்கை எடுக்காதது குறித்து கேள்வி எழுப்பியதுடன், தமிழகம்  முழுவதும்  வருவாய் கோட்டாட்சியர்களிடம் நிலுவையில் உள்ள மூத்த குடிமக்களின்  விண்ணப்பங்கள் குறித்த விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு அரசுக்கு  உத்தரவிட்டிருந்தார்.

 

இதையடுத்து, நிலுவையில் உள்ள வழக்கு விவரங்கள்  குறித்து தமிழக அரசு சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன்  அறிக்கை தாக்கல் செய்தார். அறிக்கையில், மூத்த குடிமக்கள் பராமரிப்பு சட்டத்தின்கீழ் தமிழகம்  முழுவதும் பல்வேறு வருவாய் கோட்டங்களில் 292 விண்ணப்பங்கள் நிலுவையில்  உள்ளன.  மூத்த குடிமக்கள் பராமரிப்பு சட்டத்தின்கீழ் அளிக்கப்படும்  புகார்களின் மீது 90 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை  எடுக்கவில்லை என்றால் சம்பந்தப்பட்ட கோட்டாட்சியர்கள் பொறுப்பாக்கப்படுவர்   என்று எச்சரித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது  என்று கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு, மீண்டும் ஜூன் மாதம் விசாரணைக்கு வர உள்ளது.

Related Stories: