×

ஜனாதிபதியின் ஒப்புதலை பெற கவர்னர் மூலம் நீட் விலக்கு மசோதா ஒன்றிய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்

சென்னை: ஜனாதிபதியின் ஒப்புதலை பெற கவர்னர் மூலம் நீட் விலக்கு மசோதா ஒன்றிய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இளங்கலை மருத்துவப் படிப்புகளில் நீட் நுழைவுத் தேர்வு முறையை விலக்க கோரி தமிழக சட்டசபையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 13ம்தேதி மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. மேலும் மருத்துவப் பட்டப் படிப்புகளுக்கான சேர்க்கை, 2017ம் ஆண்டுக்கு முன்பு இருந்ததைப் போல 12ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் நடத்த வேண்டும் என்றும் மசோதாவில் கூறப்பட்டிருந்தது.
 
இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட சில நாட்களுக்குப் பின்னர் தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றார். மசோதாவை ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு உடனே அனுப்பி வைக்க வலியுறுத்தி கடந்த நவம்பர் 27ம்தேதி ஆளுநர் ஆர்.என்.ரவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து வலியுறுத்தினார். அத்துடன் கடந்த டிசம்பர் 29ம்தேதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம், தமிழக அனைத்து கட்சி எம்.பி.,க்கள் குழு, நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதாவுக்கு விரைவாக ஒப்புதல் வழங்க கோரி வலியுறுத்தியது.
 
அப்போது உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தமிழக எம்.பி.,க்கள் குழு சந்திக்க முடியாமல் போனது சர்ச்சையானது. இதனை தொடர்ந்து ஜனவரி 8ம்தேதி தமிழக சட்டப்பேரவை அனைத்து கட்சிகளின் கூட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கூட்டினார்.  ஆனால் கடந்த பிப்ரவரி 3ம் தேதி நீட் தேர்வுக்கு விலக்கு கோரி தமிழக சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட மசோதாவை சபாநாயகருக்கு திருப்பி அனுப்பினார் ஆளுநர் ஆர்.என்.ரவி. இது தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
 
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டன. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை உடனே ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்தன. இதனை தொடர்ந்து கடந்த பிப்ரவரி 5ம் தேதி மீண்டும் அனைத்து கட்சிக் கூட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கூட்டியிருந்தார். அக்கூட்டத்தில் மீண்டும் சட்டசபையை கூட்டி நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்புவது என முடிவு எடுக்கப்பட்டது. இதனடிப்படையில் தமிழக சட்டசபை சிறப்பு கூட்டம் கடந்த பிப்ரவரி 8ம்தேதி கூடியது.

இதில் நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு கோரும் மசோதா மீண்டும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. முன்னதாக, இந்த மசோதா மீது நீண்ட விவாதம் நடந்தது. பாஜ எம்.எல்.ஏ.,க்கள் மட்டும் வெளிநடப்பு செய்தனர். இதர அனைத்து கட்சிகளும் மசோதாவை ஒருமனதாக ஆதரித்தன. இதையடுத்து மசோதா ஏகமனதாக நிறைவேற்றப்பட்டு மீண்டும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பப்பட்டது. ஆனாலும் ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பப்படாமல் இருந்தது. இதனால் ஆளுநர் அளித்த தேநீர் விருந்தை தமிழக அரசு புறக்கணித்தது.

இந்நிலையில், நீட் விலக்கு தொடர்பான சட்டமுன் வடிவை ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெறுவதற்கு ஏதுவாக, ஒன்றிய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாக, ஆளுநர் அலுவலகத்திலிருந்து செய்தி வரப்பெற்றது என முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சட்டப் பேரவையில் அறிவித்தார்.
 
இதுதொடர்பாக சட்டப் பேரவையில் நேற்று அவர் பேசியதாவது: தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்துவரும் நீட் தேர்விலிருந்து நமது மாணவர்களுக்கு விலக்கு பெற வேண்டும் என்பதற்காக இந்த அரசு எடுத்து வரும் தொடர் நடவடிக்கைகளைப் பற்றி நீங்கள் அனைவரும் நன்கு அறிவீர்கள். இதன் முதல்படியாக நாம் அனைவரும் இணைந்து இந்த மாமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றிய நீட் விலக்கு தொடர்பான சட்டமுன்வடிவை ஆளுநர் மறுபரிசீலனை செய்யுமாறு கோரியதும், அதுகுறித்து அனைத்து சட்டமன்ற கட்சிக் கூட்டத்தைக் கூட்டி விரிவாக விவாதித்து, சில தினங்களுக்குள்ளாகவே ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெறுவதற்கு ஏதுவாக ஆளுநருக்கு மீண்டும் அனுப்பி வைத்தோம்.  

இதுதொடர்பாக, ஆளுநரை நான் நேரில் சந்தித்து, மேலும் தாமதமின்றி இந்த சட்டமுன்வடிவை ஒன்றிய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டுமென்றும், பிரதமரையும், உள்துறை அமைச்சரையும் சந்தித்து இந்த சட்ட முன்வடிவிற்கு விரைவில் ஒப்புதல் அளிக்கப் பெற வேண்டுமென்றும் வலியுறுத்தினேன். அனைத்துக் கட்சிகளைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதுகுறித்து ஜனாதிபதி அலுவலகத்தில் மனு அளித்திருக்கிறார்கள்.    
 
இந்த தொடர் முயற்சிகளின் பயனாக, ஒரு வரலாற்று நிகழ்வாக, நாம் சட்டமன்றத்தில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பி வைத்த நீட் விலக்கு சட்டமுன்வடிவை ஒன்றிய உள்துறை அமைச்சகத்திற்கு ஜனாதிபதி ஒப்புதலைப் பெறுவதற்கு ஏதுவாக ஆளுநர் அனுப்பி வைத்துள்ளார். இந்த தகவலை, ஆளுநரின் செயலர் சில மணித்துளிகளுக்கு முன்பாக என்னிடம் தொலைபேசி வாயிலாக தெரிவித்துள்ளார். நீட் விலக்கு தொடர்பான நமது போராட்டத்தின் அடுத்தகட்டமாக ஒன்றிய அரசை வலியுறுத்தி, இந்த சட்ட முன்வடிவிற்கு ஜனாதிபதியின் ஒப்புதலை பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் அனைவரும் இணைந்து மேற்கொள்ள வேண்டுமென்ற கோரிக்கையை வைத்து அமைகிறேன்.  இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Union Home Ministry ,Governor ,President ,Chief Minister ,MK Stalin , NEED Exemption Bill sent to Union Home Ministry by Governor for President's approval: Chief Minister MK Stalin
× RELATED நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சக...