×

பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்; திருச்சியில் நாளை வணிகர் விடியல் மாநாடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

திருச்சி: திருச்சியில் நாளை நடைபெறும் வணிகர் விடியல் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று வணிகர்களுக்கு விருது வழங்கி பேசுகிறார். இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 39வது வணிகர் தினத்ைதயொட்டி தமிழக வணிகர் விடியல் மாநாடு, திருச்சி சமயபுரம் டோல்கேட் அருகில் பிரமாண்ட மைதானத்தில் நாளை (5ம் தேதி) காலை 8.30 மணிக்கு பேரமைப்பு கொடியேற்றுதலுடன் துவங்கி மாலை வரை நடக்கிறது.

இதையொட்டி காலை 9.05 மணிக்கு பரதநாட்டிய நிகழ்ச்சி, 9.30 மணிக்கு மக்கள் இசைநிகழ்ச்சி, 10 மணிக்கு குத்து விளக்கேற்றுதல் நடக்கிறது. காலை 10.15 மணிக்கு மாநாட்டு தலைமை உரையும், அதைதொடர்ந்து 10.30 மணிக்கு மாநாட்டு தீர்மானம் வாசிக்கப்பட்டு நிறைவேற்றப்படுகிறது. மாநாட்டுக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா தலைமை வகிக்கிறார். மாநில பொது செயலாளர் கோவிந்தராஜூலு வரவேற்கிறார். பொருளாளர் சதக்கத்துல்லா மாநாட்டு தீர்மானங்களை வாசிக்கிறார்.

அகில இந்திய வணிகர்கள் சம்மேளன (சிஏஐடி) தேசிய தலைவர் பார்டியா, தேசிய பொது செயலாளர் பிரவீண் கண்டேல்வால் ஆகியோர் மாநாட்டை துவக்கி வைத்து பேசுகின்றனர். இதைதொடர்ந்து வணிகர் விடியல் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று முதுபெரும் வணிகர்களுக்கு வஉசி வணிக செம்மல் விருதுகள் வழங்கி நலிந்த வணிகர்களின் வாரிசுகளுக்கு க.மோகன் நினைவாக கல்வி ஊக்கத்ெதாகை வழங்கி பேரூரையாற்றுகிறார். அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மூர்த்தி ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.

பின்னர் மதிய உணவு இடைவேளைக்கு பிறகு கலைநிகழ்ச்சி, மாலையில் மாவட்ட தலைவர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் வாழ்த்துரையும் நடக்கிறது. 38வது வணிகர் தின மாநில மாநாட்டை சென்னையில் சிறப்பாக நடத்திய நிர்வாகிகள் கவுரவிக்கப்படுகின்றனர். மாநாட்டில் எம்பி, எம்எல்ஏக்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பல்வேறு மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் வணிகர் சங்க நிர்வாகிகள், பேரமைப்பு மாநில, மண்டல, மாவட்ட, நகர, கிராம வணிகர் சங்க நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.

இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான வணிகர்கள் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க இருப்பதால் நேற்று பாதுகாப்பு ஏற்பாடுகளை ஐஜி பாலகிருஷ்ணன் தலைமையில் டிஐஜி சரவணசுந்தர், எஸ்பி சுஜித்குமார், லால்குடி டிஎஸ்பி சீதாராமன் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் பார்வையிட்டு ஆலோசனை வழங்கினர். சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் நாளை காலை சட்டசபை நிகழ்ச்சிகளை துவக்கி வைத்து விட்டு சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மூதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சிக்கு மதியம் 12 மணியளவில் வருகிறார்.

அங்கு அவருக்கு திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதைதொடர்ந்து ஏர்போர்ட்டில் இருந்து மாநாடு நடைபெறும் இடத்துக்கு காரில் செல்கிறார். பின்னர் மாநாட்டில் விருதுகள் வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார். இதைதொடர்ந்து அங்கிருந்து காரில் புறப்பட்டு மன்னார்புரத்தில் உள்ள சுற்றுலா மாளிகைக்கு வந்து மதிய உணவு சாப்பிடுகிறார். இதைதொடர்ந்து 2.30 மணியளவில் திருச்சியிலிருந்து சென்னைக்கு விமானத்தில் புறப்பட்டு செல்கிறார். திருச்சிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வருவதையொட்டி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் தலைமையில் எஸ்பி சுஜித்குமார் மேற்பார்வையில் 750க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

Tags : Merchant Dawn Conference ,Trichy ,Chief Minister of State ,Stalin , Intensity of security arrangements; Merchant Dawn Conference in Trichy tomorrow: Chief Minister MK Stalin's participation
× RELATED திருச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக செயல் வீரர்கள் கூட்டம்