×

பழநி அருகே குளத்தை ஆக்கிரமித்து விவசாயம்: கண்டும், காணாமல் அதிகாரிகள்

பழநி: பழநி அருகே பாலசமுத்திரத்தில் குளத்தை ஆக்கிரமித்து விவசாயம் செய்யப்படுவதை அதிகாரிகள் கண்டும், காணாமல் உள்ளனர். இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், பழநி பகுதியில் 80க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்கள் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டவை. இக்கிராமங்களின் விவசாயம் இப்பகுதியில் உள்ள அணைகளை நம்பியும், அணைகளில் இருந்து நீர்ப்பாசனம் பெறும் கண்மாய்களை நம்பியுமே இருந்து வருகிறது.

கோடை விவசாயத்திற்காக தற்போது குளங்களில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் குளங்களில் தண்ணீர் குறைந்து காணப்படுகிறது. இதனை தங்களுக்கு சாதமாக்கிக் கொண்ட சிலர் குளங்களில் நீர்பிடிப்பு பகுதியை ஆக்கிரமித்து விவசாயம் செய்ய துவங்கி உள்ளனர். கண்மாயின் நீர்பிடிப்பு பகுதியில் குறுகிய கால பயிர்களான வெள்ளரி, கடலை உள்ளிட்டவைகளை பயிர் செய்துள்ளனர். இதனால் நீர்பிடிப்பு பகுதி மேடாகி, குளத்தின் நீர்பிடிப்பு பகுதி நாளுக்குநாள் குறைந்து வருகிறது.

இதுகுறித்து பாலசமுத்திரத்தைச் சேர்ந்த ஆனந்தபிரபு கூறுகையில், ‘‘குளத்தின் நீர்பிடிப்பு பகுதியில் ஆக்கிரமித்து விவசாயம் செய்கின்றனர். குளத்தின் நீர்பிடிப்பு பகுதியை விவசாயத்திற்கு ஏற்றதுபோல் மேடாக்கி உள்ளனர். இதனால் மழைகாலங்களில் போதிய தண்ணீரை சேமிக்க முடியாமல் போகிறது. உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்கள் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை தயவு தாட்சண்யமின்றி அகற்ற உத்தவிட்டுள்ளது.

எனினும், பாலாறு அணைக்கு செல்லும் பிரதான சாலையின் ஓரத்தில் உள்ள பாலசமுத்திரம் மந்தைகுளத்தின் ஆக்கிரமிப்புகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்டும், காணாமல் உள்ளனர். நீதிமன்றம் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும். அதற்கு உறுதுணையாக இருக்கும் அதிகாரிகள் மீது பதவி உயர்வு ரத்து, சஸ்பென்ட் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்’’ என்று தெரிவித்தார்.

Tags : Palani Agriculture , Occupying the pond near Palani Agriculture: Occupying the pond is farming
× RELATED தானியங்களை தாக்கும் மாவுப்பூச்சியை...