×

நம்பிக்கையில்லா தீர்மான விவகாரத்துக்கு மத்தியில் இலங்கை துணை சபாநாயகர் திடீர் ராஜினாமா: நாளை புதியவரை தேர்வு செய்ய வாக்கெடுப்பு

கொழும்பு: கோத்தபய அரசுக்கு எதிராக எதிர்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர திட்டமிட்டுள்ள நிலையில், துணை சபாநாயகர் தனது பதவியை ராஜினமா செய்துள்ளார். புதிய துணை சபாநாயகரை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு நாளை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நடவடிக்கையால், அதிபர் கோத்தபய ராஜபக்சேவும், பிரதமர் மகிந்த ராஜபக்சேவும் பதவி விலகக்கோரி, கடந்த மாதம் 9ம் தேதி முதல் தலைநகர் கொழும்பு உட்பட நாடு முழுவதும் மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பிரதமர் ராஜபக்சே பதவி நீக்கம் செய்யுமாறு அதிபர் கோத்தபயவை எதிர்கட்சிகள் கோரிவந்த நிலையில், அவர் அந்த கோரிக்கையை நிராகரித்துவிட்டார்.

இடைக்கால அரசு அமைக்க வழிவிடும் வகையில், பதவி விலக மகிந்த ராஜபக்சேவும் மறுத்துவிட்டார். மொத்தம் 225 பேர் கொண்ட நாடாளுமன்றத்தில், பெரும்பான்மை பலத்திற்கு 113 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. ஆளுங் கூட்டணியில் உள்ள சில எம்பிக்களும் எதிர்கட்சிகளுடன் கைகோர்த்துள்ளதால் கோத்தபய அரசுக்கு நெருக்கடி முற்றியுள்ளது. ஆனால், அனைத்து கட்சிகளும் அடங்கிய இடைக்கால அரசை அமைப்பதாக கோத்தபய உறுதி அளித்து வருகிறார்.

இந்நிலையில், பிரதான எதிர்க்கட்சியான சமகி ஜன பலவேகயா, 2 நம்பிக்கை இல்லா தீர்மானங்களை நேற்று நாடாளுமன்ற சபாநாயகர் மகிந்த யாபா அபயவர்த்தனாவிடம் சமர்ப்பித்தது. ஒரு மசோதா, அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கும், மற்றொன்று அவரது அரசுக்கும் எதிரானதாகும். இதுபோல், முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியும், தமிழ் தேசிய கூட்டணியும் இணைந்து அதிபருக்கு எதிராக, இன்று (புதன்கிழமை) ஒரு நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப் போவதாக அறிவித்துள்ளன. இந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற்றால், பிரதமர் மகிந்த ராஜபக்சேவும், அவரது அமைச்சரவையும் ராஜினாமா செய்ய வேண்டி இருக்கும். பரபரப்பான இந்த சூழ்நிலையில் இன்று நாடாளுமன்ற கூட்டம் கூடியது.

அப்போது, வருமான வரியை அதிகரிக்கும் வகையில், புதிய வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் காலங்களில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் நிதியமைச்சர் ஆற்றிய உரையில், ‘2020ம் ஆண்டு ஜனவரியில் வரிகளைக் குறைத்தது மிகப்பெரிய தவறு. வெளிநாட்டு கையிருப்பு தற்போது 50 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் குறைவாகவே உள்ளது. வரி வருவாய் தற்போது 24 சதவீதத்தில் இருந்து 8.6 சதவீதமாக குறைந்துள்ளது. உலக வங்கியின் 400 மில்லியன் அமெரிக்க டாலர் உதவியை 700 மில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்த பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. உலக வங்கி, ஆசியன் வளர்ச்சி வங்கி மற்றும் இந்தியா ஆகியவை அத்தியாவசிய மருந்துகளை வாங்குவதற்கு மேலும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது’ என்றார்.

இதற்கிடையே தற்போதைய துணை சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, தனது ராஜினாமா கடிதத்தை, அதிபர் கோத்தபய ராஜபக்சேவிடம் அளித்துவிட்டதாகவும், அதனை அவர் ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. புதிய துணை சபாநாயகரை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு நாளை (மே 5) நடைபெறும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்தார். இலங்கையின் தற்போதைய நெருக்கடிக்கு மத்தியில் துணை சபாநாயகரின் ராஜினாமாக முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. அதனால், அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. மேலும் துணை சபாநாயகர் பதவிக்கு ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Sri Lanka ,Deputy Speaker , Trust, Resolution, Sri Lanka, Deputy Speaker, Resignation
× RELATED இலங்கையில் கார் பந்தயத்தின் போது...