×

2024ல் மம்தா பிரதமர், அபிஷேக் மேற்குவங்க முதல்வர்?.. டுவிட்டரில் பதிவை போட்டு நீக்கிய திரிணாமுல் எம்பி

கொல்கத்தா: வரும் 2024ம் ஆண்டு மம்தா பானர்ஜி நாட்டின் பிரதமராகவும்,  மேற்குவங்க முதல்வராக அபிஷேக் பானர்ஜியும் பதவியேற்பார்கள் என்று  திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டுவிட்டரில் கருத்து தெரிவித்த நிலையில், பின்னர் திடீரென அந்த கருத்தை நீக்கிவிட்டார். ஆளும் பாஜகவுக்கு எதிராக மூன்றாம் அணியை தயார் செய்யும் முயற்சியில் மேற்குவங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி ஈடுபட்டுள்ளார். இதனிடையே, 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜி நாட்டின் பிரதமராகவும், மேற்குவங்க முதல்வராக அபிஷேக் பானர்ஜியும் பதவியேற்பார்கள் என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்பி அபரூபா போடியார் தெரிவித்தார்.

இவரது பதிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், சிறிது நேரம் கழித்து தனது டுவிட்டை அபரூபா போடியார் நீக்கினார். அந்த டுவிட்டும் சமூக வலைதளங்களில் வைரலானது. முன்னதாக கடந்த 2011ம் ஆண்டு முதல் மேற்குவங்க முதல்வராக மம்தா பானர்ஜி மூன்றாவது முறையாக பதவியில் உள்ளார். மம்தா பானர்ஜியின் வெற்றிக்கு அவரது மருமகன் அபிஷேக் பானர்ஜியின் பங்கும் அதிகம். அதனால், மம்தாவின் அரசியல் வாரிசாக அபிஷேக் பானர்ஜி கருதப்படுகிறார். இதற்கிடையே திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியின் முதலாம் ஆண்டு நிறைவையொட்டி, அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் குணால் கோஷ் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘வரும் 2036ம் ஆண்டு வரை மம்தா பானர்ஜி மேற்குவங்கத்தின் முதல்வராக இருப்பார்;

அதன்பிறகு மம்தா பானர்ஜியின் முன்னிலையில் அபிஷேக் பானர்ஜி மாநில முதல்வராக பதவியேற்பார். 23 ஆண்டுகள் முதல்வராக இருந்த ஜோதிபாசுவின் சாதனையை மம்தா முறியடிப்பார்’ என்று கூறியுள்ளார். இவ்வாறாக மம்தா குறித்து அவரது கட்சியினரே பலவிதமாக கருத்துகள் கூறிவருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.


Tags : Mamata Banerjee ,West Bengal ,Chief Minister ,Trinamool ,Twitter , Mamata Banerjee to be PM, West Bengal Chief Minister in 2024? Trinamool MP
× RELATED நெற்றி, மூக்கில் படுகாயம் மம்தாவை தள்ளிவிட்டது யார்?