×

நாளை விடுமுறை எதிரொலி கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை உயர்வு

அண்ணாநகர்: சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழ்நாடு, மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா உள்பட பல மாநிலங்களில் இருந்து காய்கறிகள் வருகிறது. வணிகர் தினத்தை முன்னிட்டு நாளை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று கோயம்பேடு மார்க்கெட்டுக்கு 600 வாகனங்களில் இருந்து 6,000 டன் காய்கறிகள் வந்து குவிந்துள்ளன. நேற்று ஒரு கிலோ பீன்ஸ் 50க்கும் வெண்டைக்காய் 15க்கும் நாட்டு தக்காளி 35க்கும் பெங்களூரூ தக்காளி 40க்கும் கேரட் 25க்கும் அவரக்காய் 30க்கும் பீட்ரூட் 16க்கும் சவ்சவ் 18க்கும் கத்தரிக்காய் 20க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், நாளை மார்க்கெட் விடுமுறை என்பதால் இன்று காய்கறிகள் வாங்க மக்கள் குவிந்தனர். இதனால் காய்கறிகள் விலையும் உயர்ந்துள்ளது.

இன்று காலை ஒரு கிலோ நவீன் தக்காளி 45க்கும் பெங்களூரு தக்காளி 50க்கும் கேரட் 35க்கும் அவரக்காய் 40க்கும்  விற்பனை செய்யப்பட்டது. பீட்ரூட் 25க்கும் வெண்டைக்காய் 30க்கும் பீன்ஸ் 70க்கும் சவ்சவ் 25க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட மாங்காய் இன்று 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கோயம்பேடு வியாபாரிகள் கூறுகையில், ‘’நாளை கோயம்பேடு மார்க்கெட் விடுமுறை என்பதால் இன்று காலை 600 வாகனங்களில் 6000 டன் காய்கறிகள் வந்து குவிந்துள்ளன. இருப்பினும் காய்கறி விலைகள் உயர்ந்துள்ளன. காய்கறிகள் கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் அதிக விலைக்கு விற்பனை செய்தாலும் மக்கள் காய்கறிகளை வாங்கி  செல்கின்றனர். நாளை சிறு காய்கறி கடைகள் வழக்கம்போல் இயங்கும் என்பதால் காய்கறிகள் தடையின்றி கிடைக்கும்’ என்றார்.

Tags : Coimbatore market , Tomorrow, holiday, Coimbatore, vegetable prices, hike
× RELATED கோயம்பேடு மார்க்கெட் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை