ஒலிபெருக்கி, அனுமன் சாலிசா விவகாரம்: ராஜ் தாக்கரே மீது கலவரத்தை தூண்டும் வழக்கு

மும்பை: கலவரத்தை தூண்ட முயற்சித்த குற்றச்சாட்டின் கீழ் ராஜ் தாக்கரே மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் கடந்த 2ம் தேதி நவநிர்மாண் சேனாவின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே, ‘மே 3ம் தேதிக்குள் (நேற்று) மசூதிகளில் ஒலிபெருக்கிகள் அகற்றப்படவில்லை என்றால், இந்துக்கள் மசூதிகளின் முன் நின்று இருமடங்கு அதிக சத்தத்துடன் ஒலிபெருக்கிகளில் அனுமன் பாடல்களை ஒலிக்கச் செய்வார்கள்.

மசூதிகளில் இருந்து ஒலிபெருக்கிகளை நீக்கவில்லை எனில் அதன்பிறகு நடக்கும் சம்பவங்களுக்கு நான் பொறுப்பல்ல’ என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், அவுரங்காபாத் போலீசார்  நவநிர்மாண் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரே மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இரு பிரிவினர் இடையே கலவரத்தை தூண்டுவது உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அவுரங்காபாத் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தவர்கள் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பழைய வழக்கில் பிடிவாரண்ட்

கடந்த 2008ம் ஆண்டு ராஜ் தாக்கரே மீது 109, 117 பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் தற்போது ஜாமீனில் வெளியே வரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஷிராலா முதன்மை நீதிபதி கடந்த 6ம் தேதி பிறப்பித்த வாரண்டில், மும்பை போலீஸ் கமிஷனரகம் ராஜ் தாக்கரேயை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து அரசு தரப்பு உதவி வழக்கறிஞர் ஜோதி பாட்டீல் கூறுகையில், ‘14 ஆண்டுக்கு முன் பதியப்பட்ட வழக்கு தொடர்பாக நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாததால், ராஜ் தாக்கரே மற்றும் நவநிர்மாண் சேனாவை சேர்ந்த ரிஷ் பார்கர் ஆகியோருக்கு மும்பை போலீஸ் கமிஷனர், கேர்வாடி போலீசார் மூலமாக வாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: