தந்தை இறந்தும் இறுதி சடங்கிற்கு வராத மகனை பார்த்ததும் கண்ணீர் விட்ட தாய்: உணர்ச்சிபூர்வமான சந்திப்பில் யோகி ஆதித்யநாத்

டேராடூன்: தனது தந்தை இறந்தும் இறுதிச் சடங்கிற்கு செல்லாத யோகி ஆதித்யநாத், தனது தாயை பார்க்க உத்தரகாண்ட் சென்றார். அப்போது அவரது தாய் தனது மகனை பார்த்ததும் ஆனந்த கண்ணீர் விட்டார். உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கடந்த 5 ஆண்டுகளுக்கு பிறகு, உத்தரகாண்ட் மாநிலம் யம்கேஷ்வரில் உள்ள தனது சொந்த கிராமமான பஞ்சூருக்கு சென்றார். அங்கு அவரது தாய் சாவித்திரியை சந்தித்தார். அவரது பாதங்களை தொட்டு மரியாதை செய்தார்.

தனது தந்தையின் இறுதிச் சடங்குக்கு கூட வராமல், பல ஆண்டுகளுக்கு பின் தன் மகனைப் பார்த்த அவர், மிகவும் உணர்ச்சிவசப்பட்டு ஆனந்த கண்ணீர் விட்டு மகிழ்ச்சியடைந்தார். பின்னர் யோகி ஆதித்யநாத் தலையில் கையை வைத்து ஆசிர்வாதம் வழங்கினார். தனது தாயாருடன் சிறிது நேரம் யோகி உரையாடினார். முன்னதாக யமகேஷ்வரில் உள்ள குரு கோரக்நாத் கல்லூரி  வளாகத்தில் தனது குரு மஹந்த் வைத்தியநாத்தின் சிலையை திறந்து வைத்தார்.

அப்போது அவர் தனது பெற்றோர் மற்றும் குரு  வைத்தியநாத்தை நினைத்து உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டார். தொடர்ந்து அவர் பேசுகையில், ‘எனது குரு மஹந்த்  வைத்தியநாத்தின் சிலை திறப்பு விழா நிறைவடைந்துள்ளது. அவரது சொந்த ஊரில் அவரை நான் கவுரவிக்க முடிந்ததை நினைத்து பெருமை அடைகிறேன்’ என்றார். மூன்று நாள் பயணமாக நேற்று உத்தரகாண்ட் சென்ற யோகி, நாளை ஹெலிகாப்டர் மூலம் ஹரித்வார் செல்கிறார். அங்கு உத்தரப்பிரதேச சுற்றுலாத் துறையின் சார்பில் அலக்நந்தா ஓட்டலை திறந்து வைக்கிறார்.

Related Stories: