7 வது மாடியில் இருந்து விழுந்த இரண்டரை வயது குழந்தை பலி: ஓட்டேரியில் பரிதாபம்

பெரம்பூர்: சென்னை ஓட்டேரி ஸ்டிபன்சன் ரோட்டில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் 7வது மாடியில் வசித்து வருபவர் வனிதா (35). இவர் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர். இவரது கணவர், கடந்த ஒரு வருடத்துக்கு முன் நடந்த விபத்தில் இறந்துவிட்டார். இதையடுத்து வனிதா, தனது இரண்டு குழந்தைகள் மற்றும் தம்பி தினேஷ்குமார், தாய் ஆகியோருடன் வசித்து வருகின்றார். இந்த நிலையில், நேற்று மதியம் வனிதாவின் இரண்டரை வயது பெண் குழந்தை கவாஷ் வீட்டில் உள்ள ஷோபா மீது ஏறிநின்று ஜன்னலை திறந்து விளையாடிக்கொண்டிருந்திருக்கிறாள். திடீரென குழந்தையை காணவில்லை என்றதும் தேட ஆரம்பித்தனர். அப்போது ஜன்னல் வழியாக 7வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்த குழந்தை தலையில் படுகாயம் அடைந்து ரத்தவெள்ளத்தில் துடிப்பது தெரிந்தது.

உடனடியாக குழந்தையை புளியந்தோப்பு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் குழந்தையை பரிசோதனை செய்துவிட்டு ஏற்கனவே இறந்துவிட்டது என்று தெரிவித்தனர். இதனால் குழந்தையின் உடலை பார்த்து கதறி அழுதனர். இதுபற்றி அறிந்ததும் ஓட்டேரி போலீசார் சென்று குழந்தையின் சடலத்தை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அடுக்குமாடி குடியிருப்பில் 7வது மாடியில் இருந்துவிழுந்து இரண்டரை வயது குழந்தை இறந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: