துவரங்குறிச்சி அருகே நள்ளிரவில் பைக் மீது லாரி மோதல் மாணவன், டெய்லர் பலி: மணப்பாறை டிரைவர் கைது

துவரங்குறிச்சி: திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அடுத்த புத்தாநத்தம் இடையப்பட்டியை சேர்ந்தவர் அந்தோணி பீட்டர் (55). துவரங்குறிச்சியில் உள்ள ஒரு கடையில் டெய்லராக வேலை பார்த்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் பிலோமின்தாஸ் (18), பன்னங்கொம்பு அரசு பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். கே.உடையப்பட்டியில் உள்ள கோயில் திருவிழாவில் பங்கேற்க இருவரும் நேற்றிரவு பைக்கில் சென்றனர். திருவிழா முடிந்ததும் இரவு 11.15 மணியளவில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தனர். புத்தாநத்தம் அடுத்த சமத்துவபுரம் அருகே வந்தபோது சிவகங்கை மாவட்டம் சிங்கம் நகரில் இருந்து வந்த லாரி, பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் அந்த இடத்திலேயே பரிதாபமாக பலியாயினர்.

விபத்தை ஏற்படுத்திய லாரி நிற்காமல் சென்று விட்டது. தகவலறிந்து வந்த புத்தாநத்தம் போலீசார் விரைந்து சென்று, 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் விபத்து ஏற்படுத்திய லாரி பற்றி மணப்பாறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் மணப்பாறை போலீசார் தீவிர வாகன கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, விபத்தை ஏற்படுத்திய லாரி சிக்கியது. லாரியை பறிமுதல் செய்து, டிரைவரான மணப்பாறை பெரிய ஆணைக்காரன்பட்டி சக்கம்பட்டியை சேர்ந்த ஆனந்த்ராஜ் (37) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: