×

சாலை விரிவாக்க பணிக்கு ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டி அழிப்பு: வெப்பம் தணிக்க மரக்கன்று நட வலியுறுத்தல்

சிவகங்கை: மதுரை-தொண்டி சாலை தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப்பட்ட பிறகு கடந்த 2012ம் ஆண்டு முதற்கட்டமாக திருப்புவனம் அருகிலிருந்து காளையார்கோவில் அருகே ஆண்டிச்சியூரணி வரையும், பின்னர் 2013ம் ஆண்டு ஜனவரியில் ஆண்டிச்சியூரணியில் இருந்து, தொண்டி வரை புதிய சாலைபோடும் பணி நடந்தது. இதுபோல் திருவாரூரில் இருந்து புதுக்கோட்டை, திருப்பத்தூர் வழியாக மானாமதுரை வரையிலான சாலை விரிவாக்கப்பணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நடந்து முடிவடைந்தது.இதுபோல் காரைக்குடி, தேவகோட்டை, திருப்பத்தூர் பகுதிகளிலும் பல்வேறு சாலைப்பணிகள் நடந்தன. இந்த சாலைகளின் இருபுறத்திலும் புங்கை, செங்காந்தல், பனை, வேம்பு, கருவேலம், அரசு, புளியமரம், வேம்பு, பூவரசு, ஆலமரம் உள்ளிட்ட பல வகையான மரங்கள் இருந்தன. புதிய சாலை போடும் போது சாலையின் பிடிமானத்திற்காக இருபுறமும் சுமார் ஐந்தடி நீளத்திற்கு சுத்தம் செய்யப்பட்டு மண் கொட்டப்பட்டது. இதனால் இந்த இடத்திற்குள் இருந்த ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டன. இந்த மரங்கள் அனைத்தும் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள பழமையான மரங்களாகும்.

சாலையின் இருபுறத்திலும் மண் அரிப்பை தடுத்து சாலையின் பிடிமானமாக இம்மரங்கள் காணப்பட்டன. மதுரை, தொண்டி சாலை விரிவாக்கப் பணிக்கு வெட்டப்பட்ட மரங்களுக்கு பதில் புதிய மரக்கன்றுகள் சில இடங்களில் மட்டும் நடப்பட்டன. அவைகள் பராமரிப்பின்றி வளராமல் காய்ந்து போனது. திருவாரூர், மானாமதுரை சாலை விரிவாக்கப் பணிக்கு வெட்டப்பட்ட மரங்களுக்கு பதில் மரக்கன்று நடப்பட வில்லை. டூவீலரில் பயணிப்பவர்கள் ஓய்வெடுக்கவும், அனைத்து வாகனங்களில் பயணம் செல்பவர்களுக்கு அதிக வெப்பம் தாக்காதபடியும் இந்த மரங்களே தடுத்தன.தற்போது அனைத்து இடங்களிலும் அதிகப்படியான வெப்பம் நிலவுகிறது. சாலையோரத்தில் மரங்கள் இல்லாததால் சாலைகளில் செல்லும்போது அனல் காற்று வீசுகிறது. இதனால் டூவீலர் உள்ளிட்ட வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். பகல் நேரங்களில் சாலைகளில் செல்வதை தவிர்த்து வருகின்றனர்.

சமூக ஆர்வலர் ராமகிருஷ்ணன் கூறியதாவது, முந்தைய காலம் போல் மரங்கள் தானாக வளர்ந்துவிடும் என்ற நிலை இப்போது இல்லை. வளர்ச்சிப் பணிகளுக்காக மரங்கள் வெட்டப்படும் போது அதற்கு முன்னரே அப்பகுதியில் கூடுதல் மரக்கன்றுகள் வைத்து பராமரிக்க வேண்டும் என விதிமுறை உள்ளது. ஆனால் இந்த விதிமுறை பின்பற்றப்பட வில்லை. மரங்களை வெட்டும்போது மரக்கன்றுகளை நட்டு அவைகளை பராமரிப்பதை கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலை விரிவாக்கம் அவசியம். ஆனால் மரங்கள் அதைவிட அவசியம் என்பதை உணரவேண்டும் என்றார்.

Tags : Cutting down thousands of trees for road widening work: Forcing saplings to walk to alleviate the heat
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...