திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் தெப்பத்திருவிழா 20ம் தேதி துவக்கம்: தெப்பம் கட்டும் பணி மும்முரம்

திருவாரூர்: திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலின் தெப்பத் திருவிழாவையொட்டி தெப்பம் கட்டுமான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.திருவாரூரில் வரலாற்று சிறப்புமிக்க கோயிலாக இருந்து வரும் தியாகராஜசுவாமி கோயிலானது சைவ சமயத்தின் தலைமைபீடமாகவும், பிறக்க முக்தியளிக்கும் ஸ்தலமாகவும், சமய குறவர்கள் நால்வராலும் பாடல் பெற்ற ஸ்தலமாகவும் தலமாகவும் இருந்து வருகிறது. மேலும் பூங்கோயில் என்று அழைக்கப்பட்டு வரும் இக்கோயிலின் மூலவராக வன்மீகநாதரும், உற்சவராக தியாகராஜரும் இருந்து வருகின்றனர். கோயில் 5 வேலி,குளம் 5 வேலி,ஒடை 5 வேலி நிலபரப்பில் அமையப்பெற்றது என்ற சிறப்பினை கொண்ட இக்கோயிலுக்கு மேலும் அழகு சேர்க்கும் வகையில் கோயிலின் ஆழித்தேரானது ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய தேராகும்.

கோயிலின் விழாக்களில் பங்குனி உத்திர விழாவானது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆழித்தேரோட்டமும் அதன் பின்னர் கோயிலின் மேற்கு புறத்தில் உள்ள கமலாலய குளத்தில் தெப்ப திருவிழாவும் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்தாண்டு கடந்த மார்ச் 15ந் தேதி ஆழித்தேரோட்டம் வெகு விமர்சையாக நடந்து முடிந்தது. இந்நிலையில் தெப்ப திருவிழாவானது வரும் 20, 21 மற்றும் 22 தேதிகளில் 3 நாட்கள் நடைபெறுகிறது. நாள் ஒன்றுக்கு இரவு 3 சுற்றுகள் வீதம் இரவு 7 மணியளவில் துவங்கி மறுநாள் காலை 6 மணி வரையில் இந்த தெப்ப திருவிழா நடைபெறுவது வழக்கம். மேலும் இரும்பு பேரல்கள், மூங்கில் மற்றும் பலகை கொண்டு தெப்பம் உருவாக்கப்படும் நிலையில் இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Related Stories: