புனேவில் இன்று பலப்பரீட்சை; வெற்றியை தொடரும் முனைப்பில் சிஎஸ்கே?.. பழிதீர்க்க காத்திருக்கும் ஆர்சிபி

மும்பை: ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு புனேவில் நடைபெறும் 49வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரூ மோதுகின்றன. சென்னை 9 போட்டியில் 3 வெற்றி, 6 தோல்வி என  6 புள்ளிகளுடன் 9வது இடத்தில் உள்ளது. கடந்த போட்டியில் மீண்டும் கேப்டனாக களம் இறங்கிய டோனி வெற்றியை தேடித்தந்தார். இன்று வெற்றியை தொடரும் முனைப்பில் களம் காண்கிறது. கெய்க்வாட் பழைய பார்முக்கு திரும்பி உள்ளார்.

பந்துவீச்சில் முகேஷ்சவுத்ரி சிறப்பாக செயல்பட்டு வருகிறார். மீதமுள்ள 5 போட்டியிலும் வென்றால் தான் பிளே ஆப் வாய்ப்பில் நீடிக்க முடியும் என்ற நெருக்கடியில் சிஎஸ்கே உள்ளது.

மறுபுறம் பெங்களூரு 10 போட்டியில் தலா 5 வெற்றி, 5 தோல்விகளை சந்தித்துள்ளது. முதல் 7போட்டியில் 5ல் வென்றிருந்த நிலையில் கடைசி 3 போட்டியிலும் (ஐதராபாத், ராஜஸ்தான், குஜராத்) தோல்வி கண்டது. பேட்டிங்கில் கடந்தபோட்டியில் கோஹ்லி அரைசதம் அடித்தது ஆறுதல் அளித்தது.

மீதமுள்ள 4 போட்டியிலும் வென்றால் தான் சிக்கலின்றி பிளேஆப் வாய்ப்பில் நீடிக்கமுடியும். நடப்பு சீசனில் கடந்த 12ம்தேதி மோதிய போட்டியில் சென்னை 23 ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அதற்குஆர்சிபி இன்று பதிலடி தர போராடும். இரு அணிகளும் இதுவரை 29 போட்டிகளில் நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் சென்னை 19, பெங்களூரு 9ல் வென்றுள்ளன. ஒரு போட்டி கைவிடப்பட்டுள்ளது.  புனேவில் இதுவரை நடந்துள்ள 9 போட்டியில் 6ல் முதலில் பேட்டிங் செய்த அணியே வென்றுள்ளது. இதனால் டாஸ் முக்கிய பங்கு வகிக்கும்.

Related Stories: