×

ஐதராபாத் சுற்றுவட்டாரத்தில் விடிய, விடிய கொட்டிய கனமழை: வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தெலுங்கானா: ஐதராபாத் சுற்றுவட்டாரத்தில் விடிய, விடிய பெய்த கனமழையால் வீதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக கோடை வெயில் பயங்கரமாக சுட்டெரித்து வந்த நிலையில், இன்று அதிகாலை முதல் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல இடங்களில் மழை வெள்ளம் சூழ்ந்த நிலையில், வீடுகளிலும், கடைகளிலும் தண்ணீர் புகுந்துள்ளது. தெலுங்கானா மாநிலம் வானிலை ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிகபட்சமாக சித்திப்பூர் மாவட்டத்தில் சபிப் நகரில் 108 மி.மீ. மழையும், ஐதராபாத்தில் உள்ள செகந்திராபாத் அருகே உள்ள சிதம்பூர் மண்டியில் 72.8 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

காலை நிலவரப்படி அதிகபட்சமாக பன்சிலால்பேட்டையில் 67 மி.மீ. மழையும், மேற்குமாரடைப்பள்ளியில் 61.8 மி.மீ. மழை பெய்திருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்தது. தொடர்ந்து கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து, அனல் காற்று வீசி வந்த நிலையில் திடீரென மழை பெய்தது. இந்த மழை அப்பகுதி மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை அளித்தாலும், தாழ்வான பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த திடீர் மழையினால் வீடுகள், கடைகளில் வெள்ளநீர் புகுந்தும்,  சில இடங்களில் சாலைகளே தெரியாத அளவிற்கு மழைநீர் தேங்கியும் உள்ளதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். எனவே சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகனஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்லவேண்டும் என மாநில அரசின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Tags : Vidya ,Hyderabad , Hyderabad, Heavy rain, house, water, life
× RELATED தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பிஸ்கட் தொழிற்சாலையில் தீ விபத்து..!!