×

விருதுநகர் அடுத்த ஸ்ரீவில்லிபுத்தூரில் கண்மாய் கரை உடைப்பு: வெளியேறும் நீர் விளைநிலங்களுக்குள் புகுந்ததால் விவசாயிகள் வேதனை

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மீன்பிடிப்பதற்காக கண்மாயை உடைத்து தண்ணீரை வெளியேற்றுவதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நத்தம்பட்டி பெரியகுளம் கண்மாய் சுமார் 650 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த கண்மாய் பாசனத்தை நம்பி பலநூறு ஏக்கரில் விவசாயம் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் பெய்த மழையால் கண்மாயில் ஓரளவு தண்ணீர் நிரம்பியுள்ளது. இந்நிலையில் நத்தம்பட்டி பெரியகுளம் கண்மாயை மீன்பிடிக்க குத்தகைக்கு எடுத்தவர்கள் கடந்த 4 நாட்களுக்கு முன்பு கண்மாய் மதகை உடைத்து நீரை சட்டவிரோதமாக வெளியேற்றி வருவதாக கூறப்படுகிறது.

வெளியேறும் நீரானது அருகில் உள்ள விளைச்சல் நிலங்களுக்குள் புகுந்ததால் நெற்பயிர்கள், வாழை மரக்கன்றுகள் சேதமடைந்து விவசாயம் பாதித்துள்ளதாக விவசாயிகள் கூறினர். இதனால் அடுத்த 6 மாதங்களுக்கு விவசாயம் செய்ய நீர் இல்லாமல் போகும் என அவர்கள் வேதனை தெரிவித்தனர். குத்தகைதாரர்கள் உடைத்த மதகுகளின் வழியாக வெளியேறும் நீரை அடைக்க மணல் மூட்டை, மண் மூட்டை, வைக்கோல் படப்பு உள்ளிட்டவைகளை வைத்து முயற்சி செய்தனர். ஆனால் தண்ணீர் நிற்காமல் தொடர்ந்து வெளியேறி வருவதால் செய்வதறியாது விவசாயிகள் திகைத்து போய் உள்ளனர்.    


Tags : Kanmai ,Srivilliputhur ,Virudhunagar , Virudhunagar, Srivilliputhur, Kanmai Karai, arable land, farmers
× RELATED பொன்னமராவதி அருகே கொன்னைக் கண்மாயில் மீன்பிடி திருவிழா கோலாகலம்