ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இரு தரப்புக்கு இடையே மோதல்!: தேர்தல் வருவதால் பாஜக மோதலை தூண்டுவதாக மாநில முதல்வர் கெலாட் குற்றச்சாட்டு..!!

ஜோத்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருப்பதுடன் அப்பகுதியில் இன்று இரவு வரை ஊரடங்கு உத்தரவும் அமல்படுத்தப்பட்டுள்ளது. ரமலான் பண்டிகையை முன்னிட்டு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள ஜெலோடிகேட் சந்திப்பில் கொடி, ஒலிபெருக்கி கட்டப்பட்டிருந்தன. அப்போது பரசுராம் ஜெயந்திக்காக மற்றொரு சமூகத்தினர் கொடி கட்ட முயன்றதால் மோதல் மூண்டத்தில் இரு தரப்பினரும் கற்களை வீசி தாக்கி கொண்டனர். தகவல் அறிந்து சென்ற போலீசார் மீதும் கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. போலீஸ் வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டன. இதையடுத்து மோதலை தடுக்க கண்ணீர் புகை குண்டுகளை போலீசார் வீசினர்.

அப்போதும் நிலைமை கட்டுக்குள் வராததால் தடியடி நடத்தி அவர்களை விரட்டியடித்தனர். இதனால் அந்த பகுதியே போர்க்களம் போல காட்சியளித்தது. சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் ஜோத்பூரின் உதய் மந்திர், நகோரிகேட், கந்தா பல்ஸா, பிரதாப் நகர், தேவ் நகர், சூர் சகர் மற்றும் சர்தார்புரா பகுதிகளில் இன்று இரவு வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜோத்பூர் காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் சம்பவம் அறிந்து வருத்தம் தெரிவித்த ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்,  மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட அமைதி காக்கும்படி மக்களிடம் கேட்டுக்கொண்டார்.  இந்த வன்முறையை ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜக இணைந்து தூண்டிவிட்டதாகவும் அவர் குற்றசாட்டியுள்ளார். அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் பாஜகவுக்கு அச்சம் வந்துவிட்டதாகவும் விமர்சித்துள்ளார்.

Related Stories: