ஐபிஓ விற்பனை இன்று துவங்குகிறது எல்ஐசி பங்குகள் அடிமாட்டு விலைக்கு விற்கப்படுகின்றன: காங்கிரஸ் பரபரப்பு குற்றச்சாட்டு

புதுடெல்லி: எல்ஐசி பங்கு விற்பனை இன்று தொடங்கும் நிலையில், அடிமாட்டு விலைக்கு பங்குகள் விற்கப்படுவதாக காங்கிரஸ் கூறி உள்ளது. நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி.யின் பங்குகளை விற்று நிதி திரட்ட ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. முதலில் 5 சதவீத பங்குகள் விற்று ரூ.70,000 கோடி நிதி திரட்ட முடிவு செய்யப்பட்ட நிலையில், பின்னர் 3.5 சதவீத பங்குகள் விற்று ரூ.21,000 கோடி நிதி திரட்டப் போவதாக ஒன்றிய அரசு மாற்றி அறிவித்தது. எல்ஐசி ஐபிஓ பங்குகள் விற்பனை இன்று தொடங்குகிறது. ஒரு பங்கை ரூ.902-ரூ.949 என்ற விலைகளில் வாங்கலாம்.

இந்நிலையில், எல்ஐசி பங்குகளை ஒன்றிய அரசு அடிமாட்டு விலைக்கு விற்பதாக காங்கிரசின் தலைமை செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா குற்றம்சாட்டி உள்ார். அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: உலகின் 10வது பெரிய காப்பீடு நிறுவனமாக உள்ள எல்ஐசியின் பங்குகளை ஒன்றிய அரசு அடிமாட்டு விலைக்கு விற்கிறது. உக்ரைன் போர் மற்றும் பொருளாதார வீழ்ச்சியால் உள்நாட்டு, வெளிநாட்டு சந்தையில் நிச்சயமற்ற நிலை நிலவும் நிலையல், ஏன் எல்ஐசி பங்குகளை விற்க அரசு முயற்சிக்கிறது? 5 சதவீத பங்கு விற்பதாக கூறி ஏன் 3.5 சதவீதமாக குறைத்தது?

கடந்த பிப்ரவரியில் எல்ஐசியின் மதிப்பீடு ரூ.12-13 லட்சம் கோடி எனக் கூறிய அரசு, அடுத்த 2 மாதத்தில் ரூ.6 லட்சம் கோடியாக குறைத்தது ஏன்? பங்குச்சந்தை நிலைமை சாதகமாக இல்லாவிட்டால், பொதுத்துறை நிறுவனங்களின் பங்குளை அரசு விற்காது என பொதுத்துறை பங்கு விற்பனைக்கான பொறுப்பு செயலாளர் அறிவித்தார். இதில் எல்ஐசிக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டது ஏன்? ஜனவரி, பிப்ரவரியில் எல்ஐசி பங்கின் விலை ரூ.1100 ஆக நிர்ணயிக்கப்பட்ட நிலையில் ரூ.902-ரூ.949 ஆக குறைக்கப்பட்டது ஏன்? இவ்வாறு எல்ஐசியின் மதிப்பை குறைத்து, பங்கு விலையை அடிமாட்டு விலைக்கு விற்பதன் மூலம் அரசுக்கு ரூ.30 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.

ரூ.39.6 லட்சம் கோடி சொத்து

* எல்ஐசி.க்கு 30 கோடி பாலிசிதாரர்கள் உள்ளனர்.

* இதன் மொத்த சொத்து மதிப்பு ரூ.39.6 லட்சம் கோடி.

* எல்ஐசி தனது முதலீடுகளின் மூலம் கடந்தாண்டு ஏப்ரல்-செப்டம்பர் காலகட்டத்தில் ரூ.3.35 லட்சம் கோடி வருவாய் ஈட்டி உள்ளது.

* நாடு முழுவதும் 3,542 அலுவலகங்களைக் கொண்ட எல்ஐசி.யில் முகவர்களாகவும், நேரடி ஊழியர்களாகவும் 13.94 லட்சம் பேர் பணிபுரிகின்றனர்.

* ஆண்டுக்கு 3 கோடி பாலிசிகளை பிடிக்கும் இந்நிறுவனம், ஒருநாளைக்கு 1 லட்சம் பாலிசிகளை சேர்த்து வருகிறது. - ரன்தீப் சுர்ஜேவாலா

Related Stories: